முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.41½ லட்சம் அபராதம் வசூல் கலெக்டர் தகவல்


முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.41½ லட்சம் அபராதம் வசூல் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 July 2020 1:07 AM GMT (Updated: 2020-07-08T06:37:41+05:30)

முக கவசம் அணியாதவர்களிடம் இதுவரை ரூ.41½ லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் வினய் கூறினார்.

மதுரை, 

மதுரை மாவட்ட கலெக்டர் வினய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. அதேபோல் மதுரை மாநகராட்சி பகுதிகள், பரவை பேரூராட்சி பகுதி, மதுரை கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் மட்டும் வருகிற 12-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மதுரை மாவட்டத்தில் பொது இடங்களில் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

அபராதம்

கடந்த மே மாதம் 19-ந் தேதி முதல் நேற்று வரை முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.41 லட்சத்து 56 ஆயிரத்து 950 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முக கவசம் மற்றும் வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளி பின்பற்றாமையை கண்டறிந்து உடன் அபராதத் தொகைவிதிக்க பல்வேறு கண்காணிப்பு மற்றும் பறக்கும் படை குழுக்கள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் இனி வருங்காலங்களில் எவரேனும் முக கவசம் அணியாமல் இருந்தால் அபராதத் தொகை கூடுதலாக விதிக்கப்படும். எனவே பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story