மதுரை கோட்ட ரெயில்வேயில் சரக்கு போக்குவரத்து வருமானத்தை அதிகரிக்க குழு


மதுரை கோட்ட ரெயில்வேயில்   சரக்கு போக்குவரத்து வருமானத்தை அதிகரிக்க குழு
x
தினத்தந்தி 8 July 2020 6:51 AM IST (Updated: 8 July 2020 6:51 AM IST)
t-max-icont-min-icon

மதுரை கோட்ட ரெயில்வேயில் சரக்கு போக்குவரத்து மூலம் வருமானத்தை அதிகரிக்க முதுநிலை வர்த்தக மேலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை, 

நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்தில் ரெயில்கள் தான் மிக முக்கிய பங்காற்றி வந்தது. ஆனால், கூடுதல் எடைகொண்ட பொருட்களை கொண்டு செல்லும் அளவுக்கு நவீன சரக்கு லாரிகள் வருகைக்கு பின்னர், ரெயில்களில் சரக்குகளை அனுப்புவது குறைந்தது. சிமெண்டு, ஜவுளி மற்றும் தொழிற்சாலைகள் பொருட்களை உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்து சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பி வந்தன. ஆனால், சரக்கு ரெயில்களில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் சம்பந்தப்பட்ட இடத்தை அடைய காலதாமதமாகி வருகிறது.

மேலும், ரெயில் நிலையங்களுக்கு வந்து சேரும் சரக்குகளை அங்கிருந்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டி உள்ளது. அதனால் காலவிரயம் ஏற்பட்டு வருகிறது. இதனால், சரக்கு ரெயில் வருமானம் வெகுவாக குறைந்தது. இதனை கருத்தில் கொண்டு ரெயில்வே வாரியம், சரக்கு ரெயில் போக்குவரத்துக்கான தனி ரெயில்பாதையை கட்டமைத்து வருகிறது.

2 மடங்கு

இதற்கிடையே, ரெயில்வே சரக்கு போக்குவரத்தை வருகிற 2024-ம் ஆண்டுக்குள் 2 மடங்காக அதிகரிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக தொழில் வளர்ச்சிக்கான தனிக்குழுவை அந்தந்த கோட்ட ரெயில்வே அமைத்துள்ளது.

அதன்படி, மதுரை கோட்டத்தில் திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கேரள மாநிலம் கொல்லம் ஆகிய மாவட்டங்களில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சரக்கு போக்குவரத்து நடைபெறுகிறது.

மேம்பாட்டு குழு

ரெயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி, பல்நோக்கு வர்த்தக மேம்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக முதுநிலை வர்த்தக மேலாளர் பிரசன்னா நியமிக்கப்பட்டுள்ளார். செயலாளராக முதுநிலை இயக்க மேலாளர் ரதிப்பிரியா, உறுப்பினர்களாக முதுநிலை நிதி மேலாளர் மாதுரி ஜெய்ஸ்வால், முதுநிலை மெக்கானிக்கல் என்ஜினீயர் ராஜேந்திர நாயக் ஆகியோரை நியமித்து கோட்ட மேலாளர் லெனின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழுவினர் தொழில் வர்த்தக நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொண்டு, சரக்கு போக்குவரத்தை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வர். தற்போது கொரோனா ஊரடங்கால், தொழில் நிறுனங்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொள்வர். இதற்கான கூட்டம் இன்று(புதன்கிழமை) நடக்கிறது.

Next Story