கொரோனா பரவல் எதிரொலி: 57 வயதை கடந்த போலீசாருக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை


கொரோனா பரவல் எதிரொலி: 57 வயதை கடந்த போலீசாருக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை
x
தினத்தந்தி 8 July 2020 6:59 AM IST (Updated: 8 July 2020 6:59 AM IST)
t-max-icont-min-icon

மதுரை நகரில் உடல் நலம் பாதிக்கப்பட்ட போலீசாருக்கு நேற்று மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதுபோல் 57 வயதை கடந்த போலீசாருக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை, 

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்றவர்கள் பாதிப்புக்குள்ளாவது போல் பொதுமக்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் மதுரை மாநகரில் 130-க்கும் மேற்பட்ட போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தநிலையில் மதுரை நகரில் பணிபுரியும் 57 வயதிற்கு மேற்பட்ட 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், ஒரு ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர், 71 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 22 சப்-இன்ஸ்பெக்டர்கள், 3 தலைமை காவலர்கள் என மொத்தம் உள்ள 99 பேரில், யாருக்கேனும் உடல்நலம் சரியில்லை என தெரியவந்தால் அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் தேவையான விடுமுறையை வழங்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார்.

பரிசோதனை

இதுபோல் மதுரையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 2 இன்ஸ்பெக்டர்கள், 5 சப்-இன்ஸ்பெக்டர்கள், 38 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 24 போலீசார் என மொத்தம் உள்ள 69 நபர்களின் நலன் கருதியும், நோய் தொற்றிலிருந்து அவர்களை பாதுகாக்கும் பொருட்டும் அவர்கள் அனைவருக்கும் நேற்று ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் மருத்துவமனையில் வைத்து முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் உடல்நலம் சரியில்லாதவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளவும், அவ்வாறு தனிமைப்படுத்திக்கொள்ளும் காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் வீட்டில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தி இருக்கிறார்.

Next Story