ராஜபாளையம் அருகே காதலியை பிரிந்த வாலிபர் மர்ம சாவு உறவினர்கள் பரபரப்பு புகார்
ராஜபாளையம் அருகே காதலியை பிரிந்த வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள அக்கரைப்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 23), கட்டிட தொழிலாளி. இவரும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்தநிலையில் மகேந்திரன், அந்த பெண்ணை அழைத்து கொண்டு ராஜபாளையம் அண்ணா நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். இதற்கிடையே அந்த பெண்ணின் தந்தை, தனது மகளை காணவில்லை என கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையறிந்த மகேந்திரனின் உறவினர்கள், அந்த பெண்ணை போலீசார் முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்தநிலையில் ராஜபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்த மகேந்திரன் திடீரென மாயமானார். இவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.
பிணமாக மீட்பு
சங்கரன்கோவில் செல்லும் சாலையில் உள்ள தனியார் ஆலையின் பின்புறம் உள்ள குடோன் அருகே நேற்று காலை மரத்தில் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு பிணமாக இருப்பதாக ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் உள்ளிட்ட போலீசார் சென்று விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் இறந்தது மகேந்திரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து மகேந்திரனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் மகேந்திரனின் சாவில் மர்மம் உள்ளதாக அவரது உறவினர்கள் ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் காதலியை பிரித்ததால் மனவருத்தம் அடைந்த மகேந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை வேறு யாரேனும் கொலை செய்து, தூக்கில் தொங்க விட்டார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story