செங்கிப்பட்டி அருகே ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அனைத்துக்கட்சியினர் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் ரத்து பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு


செங்கிப்பட்டி அருகே ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி   அனைத்துக்கட்சியினர் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் ரத்து   பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு
x
தினத்தந்தி 8 July 2020 9:37 AM IST (Updated: 8 July 2020 9:37 AM IST)
t-max-icont-min-icon

செங்கிப்பட்டி அருகே ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அனைத்துக்கட்சியினர் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது. உதவி கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு காணப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யோத்திப்பட்டி கிராமத்தில் 45 ஏக்கர் பரப்பளவு கொண்ட பறையன் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது 10 ஏக்கருக்கும் குறைவாக உள்ளது. ஏரியில் மண் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதை கண்டித்தும், ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் அனைத்து கட்சியினர் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் அயோத்திப்பட்டி பறையன் ஏரியில் இன்று (புதன்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து தஞ்சை உதவி கலெக்டர் (வருவாய் கோட்டாட்சியர்) வேலுமணி தலைமையில் நேற்று அமைதி பேச்சுவார்த்தை தஞ்சையில் நடைபெற்றது. இதில் பூதலூர் தாசில்தார், துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், வட்டார வளர்ச்சி அதிகாரி, வருவாய் அய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி பங்கேற்றனர்.

அகற்ற வேண்டும்

போராட்டக்குழு சார்பில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பகத்சிங், மாரிமுத்து, குழ.பால்ராஜ், அய்யாதுரை, விடுதலைவேந்தன், கண்ணன், வெற்றிவேந்தன், தீபன்சக்கரவர்த்தி, தியாக.காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து கூட்டத்தில், வருகிற 20-ந்தேதிக்குள் ஏரியை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பூதலூர் தாசில்தாருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஏரி வரத்து வாய்க்காலை சரி செய்ய கலெக்டரிடம் அனுமதி பெற்று பணி முடிக்க வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டது.

போராட்டம் ரத்து

ஏரி பகுதிக்குள் அரசு நிலம் வழங்கப்பட்டிருந்தால் அதற்கான நிபந்தனைகள் மீறப்பட்டு இருப்பின் மேற்படி நிலத்தை மீண்டும் அரசு தரப்பாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு விதிமுறை மீறி மண் எடுக்கப்பட்டு இருந்தால் கனிம வள உதவி இயக்குனர் மூலம் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் கைவிடுவது என முடிவு செய்யப்பட்டது.

Next Story