செல்போன் கடையில் ஒருவருக்கு தொற்று உறுதியானதால் தஞ்சை பர்மா பஜார் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை
தஞ்சை பர்மா பஜாரில் செல்போன் கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பர்மாபஜாரில் கடை வைத்திருப்பவர்களுக்கும், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை பர்மாபஜாரில் ஏராளமான செல்போன் கடைகள், பழுது நீக்கும் கடைகள் உள்ளன. இங்குள்ள ஒரு கடையில் வேலை பார்த்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள மற்ற கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் அச்சம் அடைந்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மாநகராட்சியின் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் மூலம் பனகல் கட்டிட வளாகத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
100 பேருக்கு பரிசோதனை
100-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் பரிசோதனை நடைபெறுவதை மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது டாக்டர்கள் முத்துக்குமார், அசோகன் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.
இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், “தஞ்சை மாநகராட்சி நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம் இதுவரை 900-த்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொற்று உறுதியான பகுதிகளில் இந்த வாகனம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடையை மூட உத்தரவு
தற்போது செல்போன் கடை ஊழியருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட கடையில் கிருமிநாசினி தெளிக்கவும், கடையை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது”என்றனர்.
Related Tags :
Next Story