மயிலாடுதுறையில் பாதாளசாக்கடை அடைப்பை சீரமைக்க புதிய சாலையை உடைத்து சேதப்படுத்தும் அவலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


மயிலாடுதுறையில் பாதாளசாக்கடை அடைப்பை சீரமைக்க    புதிய சாலையை உடைத்து சேதப்படுத்தும் அவலம்   நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 8 July 2020 4:33 AM GMT (Updated: 8 July 2020 4:33 AM GMT)

மயிலாடுதுறையில் பாதாளசாக்கடை அடைப்பை சீரமைக்க புதிய சாலையை உடைத்து சேதப்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குத்தாலம், 

மயிலாடுதுறை நகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ.8 கோடி மதிப்பீட்டில் பல்வேறு தெருக்களுக்கு புதிய சாலைகள் போடப்பட்டன. அதேபோல நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் நகரில் பல்வேறு முக்கிய சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. பாதாளசாக்கடை ஆள்நுழைவு தொட்டி மீது 3 அடி உயரம் வரை சாலை அமைக்கப்பட்டுள்ளதால், பாதாளசாக்கடையில் ஏற்படும் அடைப்பை ஊழியர்கள் சீரமைக்க புதிய சாலைகளை உடைத்து பெயர்த்து எடுக்க வேண்டிய அவலநிலை உள்ளது.

சாலை உடைப்பு

குறிப்பாக அரசு மருத்துவமனை சாலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு தான் நகராட்சி சார்பில் புதிதாக சாலை போடப்பட்டது. அப்போது பாதாளசாக்கடை ஆள்நுழைவு தொட்டியை உயர்த்தி சீரமைக்காமல், அதன் மீதே 3 அடி உயரம் வரை சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த பகுதியில் பாதாளசாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சீரமைக்க ஊழியர்கள் புதிய சாலையை பல இடங்களில் உடைத்து பாதாளசாக்கடை சீரமைப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் புதிய சாலை சேதமடைந்ததோடு, சாலை உடைக்கப்பட்டபோது ஏற்பட்ட பள்ளத்தில் வாகன ஓட்டிகள் சிக்கி கொண்டு விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் நடக்கின்றன. அங்கு பணிகளை மேற்கொள்ளும்போது எச்சரிக்கை பலகைகளை கூட நகராட்சி பணியாளர்கள் வைக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். நகர் முழுவதும் நடக்கும் பாதாளசாக்கடை சீரமைப்பு பணியிலும் இதேநிலை தான் இருந்து வருகிறது.

பாதாளசாக்கடை ஆள்நுழைவு தொட்டிகள்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

புதிதாக சாலை அமைக்கும் முன்பே பாதாளசாக்கடை ஆள்நுழைவு தொட்டிகளின் அளவை உயர்த்தி அமைத்திருந்தால் புதிய சாலையை உடைத்து சேதப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. மேலும் வாகன ஓட்டிகள் சாலையில் விழுந்து ஏற்படும் விபத்தும் தவிர்க்கப்பட்டிருக்கும். பல்வேறு இடங்களில் புதிய சாலைகள் உடைக்கப்படுவதால் அதற்காக செலவு செய்யப்பட்ட தொகையும் வீணாகாமல் தவிர்க்கப்பட்டிருக்கும். எனவே பாதாளசாக்கடை ஆள்நுழைவு தொட்டிகளின் அளவை உயர்த்திவிட்டு புதிய சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாளசாக்கடை சீரமைப்பு பணி மேற்கொள்ளும்போது எச்சரிக்கை பலகைகளை வைத்து, வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story