திருமருகல் அருகே, விற்பனை கூடத்தில் பருத்தியை விற்பனை செய்ய 3 நாட்கள் காத்திருந்த விவசாயிகள் சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
திருமருகல் அருகே வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தியை விற்பனை செய்ய விவசாயிகள் 3 நாட்கள் காத்திருந்தனர். பருத்தி ஏற்றி வந்த வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திட்டச்சேரி,
நாகை மாவட்டம் திருமருகல் அருகே சீயாத்தமங்கையில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு திருமருகல், திருச்செங்காட்டாங்குடி, திருக்கண்ணபுரம், திருப்புகலூர், ஆலத்தூர், இடையாத்தங்குடி, கணபதிபுரம், அம்பல், போலகம், விற்குடி, வாழ்குடி உள்ளிட்ட 39 ஊராட்சிகளை சேர்ந்த பருத்தி விவசாயிகளிடம் இருந்து பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு, ஏலம் விடப்பட்டு வருகிறது.
வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்திய பருத்திக்கழகத்தினர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பருத்தியை ஏலம் எடுப்பார்கள். கடந்த வாரம் மழை காரணமாக ஏலம் நடைபெறவில்லை. இதனால் விற்பனை கூடத்தில் பருத்தி தேக்கம் அடைந்தது.
3 நாட்களாக காத்திருப்பு
இந்த வாரத்துக்கான ஏலம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பருத்தியை விற்பதற்காக விவசாயிகள் கடந்த 3 நாட்களாக காத்திருந்தனர். விவசாயிகள் பருத்தி ஏற்றி வந்த வாகனங்கள் நாகை-நன்னிலம் சாலையில் சீயாத்தமங்கை பகுதியில் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போதிய அளவில் பணியாளர்கள் இல்லாததால் விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் மந்த கதியில் நடப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். பருத்தியை விற்பனைக்கூடத்தில் உள்ள குடோனில் இறக்கி வைக்க இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், விரைவாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story