கரூரில் சிறுவன் உள்பட 3 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று


கரூரில் சிறுவன் உள்பட 3 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
x
தினத்தந்தி 8 July 2020 6:29 AM GMT (Updated: 8 July 2020 6:29 AM GMT)

கரூரில் சிறுவன் உள்பட 3 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரூர், 

கரூர் மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஏற்கனவே 44 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று கரூர் பண்டரிநாதன் தெருவை சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவருக்கும், வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த 78 வயதுடைய முதியவர் ஒருவருக்கும், திருக்காம்புலியூர் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன் என 3 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டு இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் ஏற்கனவே நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் பூரண குணம் அடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது, 43 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதியவருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தை சேர்ந்த74 வயது முதியவர் ஒருவர் குடும்பத்தினரிடம் கோபித்து கொண்டு, கரூர் மாவட்டம் புகளூர் ரெயில்வே நிலையம் அருகே உள்ள பயணிகள் நிழற்குடையில் தங்கி இருந்தார். இந்நிலையில் அவருக்கு சளி, இருமல் அதிகமானதால் அக்கம்பக்கத்தினர் அவரை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, காகிதஆலை பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமையில், தூய்மை பணியாளர் குழுவினர், அவர் தங்கி இருந்த பயணிகள் நிழற்குடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து, குளோரிங் பவுடர் தூவினர். மேலும், வாங்கல் வட்டார சுகாதாரத்துறை மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் வீரமணி, டாக்டர் அனிதா ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர், பயணிகள் நிழற்குடை பகுதிக்கு யாரும் செல்லாதவாறு தடுப்புகளை ஏற்படுத்தினர். பின்னர் அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

Next Story