பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஹாசன் ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம் அரசு மரியாதையுடன் நடந்தது
பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த, ஹாசன் ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
ஹாசன்,
பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த, ஹாசன் ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
ராணுவ வீரர் சாவு
ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தாலுகா அத்திலி சித்தாப்புரா கிராமத்தை சேர்ந்தவர் மல்லேஷ் கவுடா(வயது 38). ராணுவ வீரரான இவர் அருணாசல பிரதேச மாநிலத்தில் இந்திய-சீன எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மல்லேஷ், சக ராணுவ வீரர்களுடன் ஜீப்பில் பணிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது ஜீப், பனிச்சரிவில் சிக்கி விபத்துக்குள்ளானது.
இதில் மல்லேஷ் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு அங்கு உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார். இதுகுறித்து மல்லேசின் குடும்பத்தினருக்கு, ராணுவ அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். இதனால் அவரது குடும்பத்தினரும், கிராம மக்களும் சோகத்தில் மூழ்கினர்.
உடல் அடக்கம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அருணாசல பிரதேசத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் மல்லேசின் உடல் பெங்களூருவுக்கு வந்தது. அதன்பின்னர் அவரது உடல் ஆம்புலன்சில் வைத்து அரக்கல்கோடுவுக்கு நேற்று காலை 5.45 மணிக்கு எடுத்து வரப்பட்டது. மல்லேசின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் கிராம மக்கள் திரண்டு வந்து மல்லேசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஏ.மஞ்சு, அரக்கல்கோடு தொகுதி எம்.எல்.ஏ. ஏ.டி.ராமசாமி, கலெக்டர் கிரீஷ், போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச கவுடா, தாசில்தார் ரேணுகுமார் ஆகியோரும் மல்லேசின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மல்லேசின் உடல் ஊர்வலமாக மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் மல்லேசின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மல்லேசின் மனைவி, குழந்தைகள், குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story