சிகிச்சை பெற்று வந்தவரை பரிசோதிக்காமல் வீட்டுக்கு அனுப்பினர் போலீஸ்காரருக்கு மீண்டும் நடந்த சோதனையில் வைரஸ் தொற்று உறுதி


சிகிச்சை பெற்று வந்தவரை பரிசோதிக்காமல் வீட்டுக்கு அனுப்பினர் போலீஸ்காரருக்கு மீண்டும் நடந்த சோதனையில் வைரஸ் தொற்று உறுதி
x
தினத்தந்தி 9 July 2020 4:00 AM IST (Updated: 8 July 2020 10:58 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கொரோனா பாதித்த போலீஸ்காரர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரை பரிசோதிக்காமல் டாக்டர்கள் வீட்டுக்கு அனுப்பினர்.

பெங்களூரு

பெங்களூருவில் கொரோனா பாதித்த போலீஸ்காரர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரை பரிசோதிக்காமல் டாக்டர்கள் வீட்டுக்கு அனுப்பினர். இந்த நிலையில் அந்த போலீஸ்காரருக்கு மீண்டும் நடந்த சோதனையில் வைரஸ் தொற்று உறுதியாகி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போலீஸ்காரர் டிஸ்சார்ஜ்

பெங்களூருவில் போலீசாருக்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், சாம்ராஜ்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருக்கு கடந்த மாதம் (ஜூன்) 26-ந் தேதி கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் போலீஸ்காரருக்கு கொரோனா பரிசோதனை நடத்தாமல், அவர் குணமடைந்து விட்டதாக கூறி கடந்த 3-ந் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். போலீஸ்காரரும் தான் குணமடைந்து விட்டதாக நினைத்து ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்து விட்டார். அதே நேரத்தில் பணிக்கு செல்ல அவர் தயாரானார்.

ஊழியர்கள் அலட்சியம்

அப்போது உயர் அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் டிஸ்சார்ஜ் செய்யும் முன்பாக கொரோனா பரிசோதனை மீண்டும் நடத்தப்பட்டதா? என்று போலீஸ்காரரிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, பணிக்கு வரும் முன்பாக மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. அப்போது அந்த போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அவர் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அதே நேரத்தில் ஆஸ்பத்திரி ஊழியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக போலீஸ்காரருக்கு கொரோனா பரிசோதனை நடத்தாமலேயே டிஸ்சார்ஜ் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story