கொரோனா களப்பணியில் ஈடுபடும் பெண்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி


கொரோனா களப்பணியில் ஈடுபடும் பெண்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
x
தினத்தந்தி 8 July 2020 10:45 PM GMT (Updated: 8 July 2020 8:13 PM GMT)

கொரோனா களப்பணியில் ஈடுபடும் பெண்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

திருவொற்றியூர்,

சென்னை தண்டையார்பேட்டை மண்டலம் செரியன் நகர் அரசு பள்ளியில் கொரோனா களப்பணியாளர்களுடன் அமைச்சர் பாண்டியராஜன் கலந்துரையாடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-

சென்னையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 374 ஆக உள்ளது. குறிப்பாக தண்டையார்பேட்டையில் 1,690 ஆக உள்ளது. இங்கு 2,250 களப்பணியாளர்கள், 3 மருத்துவ மையங்கள் செயல்படுகின்றன. கொரோனாவால் இறப்பு எண்ணிக்கையில் தண்டையார்பேட்டை 2-ம் இடத்தில் உள்ளது. அதை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தொற்று ஏற்பட்ட முதல் 5 நாட்களில் கண்டறியும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கட்டுக்குள் வந்ததுபோல் இறப்பு எண்ணிக்கையும் கட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. கொரோனா களப்பணியில் பெரும்பாலான பெண்கள் ஈடுபட்டு உள்ளனர். அவர்களின் பணி பாதுகாப்பில் எந்தவொரு சமரசமும் கிடையாது.

களப்பணியில் ஈடுபட்ட பெண்ணிடம் வார்த்தை வன்முறையில் ஈடுபட்ட போலீஸ்காரர், 3 மணி நேரத்தில் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். மற்றொரு சம்பவத்தில் மாநகராட்சி உதவி பொறியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story