சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: மேலும் 5 போலீசார் கைது சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை


சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: மேலும் 5 போலீசார் கைது சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 9 July 2020 4:45 AM IST (Updated: 9 July 2020 1:52 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் மேலும் 5 போலீசாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தூத்துக்குடி,

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் மேலும் 5 போலீசாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தந்தை-மகன் சாவு

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்து இருந்ததாக கூறி சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்று தாக்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

மேலும் கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அவர் கோவில்பட்டி ஜெயில், சாத்தான்குளம் போலீஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தினார். இறந்தவர்களின் உறவினர்கள் உள்பட பல்வேறு சாட்சிகளிடமும் விசாரணை மேற்கொண்டார். அப்போது, போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று ஐகோர்ட்டில் புகார் தெரிவித்தார். அதன்பிறகு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் 5 பேர் கைது

தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரவு சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர், போலீஸ் சூப்பிரண்டு மாடசாமி ஆகியோர் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் சிறிது நேரம் விசாரணை அதிகாரி மற்றும் போலீசாருடன் ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து இரவோடு இரவாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் ஒரு அதிரடி வேட்டையை நடத்தினர்.

அதன்படி சம்பவத்தன்று சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் 14 பேரை மடக்கி பிடித்து இரவோடு இரவாக சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை, ஏட்டுகள் சாமித்துரை, செல்லத்துரை, முதல் நிலை காவலர் தாமஸ் பிரான்சிஸ், போலீஸ்காரர் வெயிலுமுத்து ஆகிய 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Next Story