ஒரே கடையில் வேலை பார்த்தவர்கள் கோட்டார் மார்க்கெட்டில் 4 பேருக்கு தொற்று


ஒரே கடையில் வேலை பார்த்தவர்கள் கோட்டார் மார்க்கெட்டில் 4 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 9 July 2020 4:00 AM IST (Updated: 9 July 2020 2:46 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட்டில் ஒரே கடையில் வேலை பார்த்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட்டில் ஒரே கடையில் வேலை பார்த்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பு

குமரி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. வடசேரி, மார்த்தாண்டம் சந்தைகள் மூலமாக தொற்று பரவியது. நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கி சென்ற வில்லுக்குறியைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி ஆனது.

தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கோட்டார் மார்க்கெட்டில் அனைத்து வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் சளி மாதிரியை எடுத்து பரிசோதனை செய்தனர். அப்போது மார்க்கெட்டில் உள்ள கடை ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அதோடு அவருடன் பணியாற்றிய மேலும் 2 பேருக்கும் காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

4 பேருக்கு தொற்று

எனவே 3 பேரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டன. இதில் 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து 3 பேரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையே சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட் டார். ஒரே கடையில் உரிமையாளர் மற்றும் 3 தொழிலாளர்கள் என 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த கடை பூட்டப்பட்டது. அங்கு கிருமி நாசினி தெளித்து, பிளச்சிங் பவுடர் தூவப்பட்டது. தொழிலாளர்கள் வசித்து வந்த பெரியவிளை பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பிளச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி மருந்து தெளித்தனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

தனியார் ஆஸ்பத்திரி

இதே போல சவேரியார் ஆலயம் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்து சென்ற மூதாட்டி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரி மூடப்பட்டது. அங்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடந்தது.

Next Story