ரூ.25 கோடியில் கட்டப்பட்ட ஈச்சனாரி மேம்பாலத்தில் சோதனை ஓட்டம் 13-ந் தேதி முதல் வாகனங்களுக்கு அனுமதி
ரூ.25 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட ஈச்சனாரி மேம்பாலத்தில் நேற்று வாகனங்களை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இது, வெற்றிகரமாக முடிந்ததால் வருகிற 13-ந்தேதி முதல் மேம்பாலத்தில் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்பட உள்ளது.
கோவை,
கோவை- பொள்ளாச்சி அதிவிரைவு சாலைக்காக பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வந்தன. இதில், ஈச்சனாரி பகுதியில் ரூ.25 கோடி செலவில் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு மேம்பால பணிகள் நடைபெற்றது. இதனால் வாகனங்கள் அனைத்தும் மதுக்கரை மார்க்கெட், மலுமிச்சம்பட்டி வழியாக திருப்பி விடப்பட்டன. இதன் காரணமாக கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்கும், பொள்ளாச்சியில் இருந்து கோவை வருவதற்கும் 30 நிமிடம் கூடுதலானது. மேலும் மதுக்கரை மார்க்கெட் சாலை பகுதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் தற்போது மேம்பால பணிகள் முழுமையாக முடிவடைந்து உள்ளன. எனவே நேற்று மேம்பாலத்தில் வாகனங்களை இயக்கி சோத னை ஓட்டம் நடைபெற்றது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் உதயசங்கர் கூறியதாவது-:-
13-ந்தேதி முதல் போக்குவரத்து
ஒரு கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்ட ஈச்சனாரி மேம்பாலத்தில் வாகன சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. எனவே வருகிற 13-ந் தேதி முதல் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளது. இதனால் மதுக்கரை மார்க்கெட் சாலை வழியாக வாகனங்கள் சுற்றி வருவது தவிர்க்கப்படும். வாகன போக்குவரத்து விரைவாக நடைபெறும். இந்த பாலம் கட்டப்பட்டு உள்ளதன் மூலம் கோவை-பொள்ளாச்சி இடையே விரைவாக சென்று வரக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story