மராட்டியத்தில் ஒரே நாளில் 278 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,713 ஆக அதிகரிப்பு


மராட்டியத்தில் ஒரே நாளில் 278 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,713 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 8 July 2020 11:15 PM GMT (Updated: 8 July 2020 10:45 PM GMT)

மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் 278 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

மும்பை, 

மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் 278 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்த போலீசாரின் எண்ணிக்கை 5,713 ஆக அதிகரித்துள்ளது.

போலீசாருக்கு கொரோனா

நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில் மராட்டியம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இங்கு மும்பை, தானே, புனே நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. மாநிலத்தில் ஊரடங்கு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள போலீசார் கொரோனாவால் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்றுமுன்தினம் வரை மாநிலத்தில் 5 ஆயிரத்து 435 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்தநிலையில், மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 278 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மராட்டியத்தில் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 713 ஆக அதிகரித்து உள்ளது.

71 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு மராட்டியத்தில் இதுவரை 71 போலீசார் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் 43 பேர் தலைநகர் மும்பையை சேர்ந்தவர்கள். தொற்று பாதிக்கப்பட்ட போலீசாரில் இதுவரை 4 ஆயிரத்து 531 பேர் இந்த நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, மாநிலத்தில் கடந்த மார்ச் 25-ந் தேதியில் இருந்து ஊரடங்கை மீறியதாக 1 லட்சத்து 55 ஆயிரத்து 984 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1 லட்சத்து 29 ஆயிரத்து 793 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 88 ஆயிரத்து 783 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.11 கோடியே 54 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தெரிவித்தார்.

Next Story