கோவை மாநகரில் கொரோனா தடுப்பு பணி பொதுமக்களிடம் நேர்மறையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் போலீசாருக்கு கமிஷனர் சுமித்சரண் அறிவுரை
கோவை மாநகரில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போது போலீசார், பொதுமக்களிடம் நேர்மறையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் கமிஷனர் சுமித்சரண் அறிவுரை வழங்கினார்.
கோவை,
கோவை மாநகரில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் சிறப்பாக செயல்படுவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் கலந்து கொண்டு போலீசாருக்கு அறிவுரை வழங்கி பேசியதாவது:-
கொரோனா பரவல் காரணமாக மக்களின் வாழ்க்கை முறையே மாறி விட்டது. அவர்களின் மன நிலையும் மாறி உள்ளது. இதுபோன்ற சமயங்களில் போலீசார் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டும். கொரோனா காரணமாக பல்வேறு மனஉளைச்சலில் உள்ள பொதுமக்களை கையாள்வது மிகவும் சிரமம் ஆகும். எனவே போலீசார் கவனமாகவும், பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
நேர்மறை அணுகுமுறை
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இனி வரும் காலங்களிலும் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும். ஒரு போலீஸ்காரர் சிறிய தவறு செய்தாலும் அது அனைத்து நல்ல விஷயங்களையும் மறக்கடிக்க செய்து விடும். கொரோனா தடுப்பு நடவடிக்கையின் போது வாகன சோதனை, முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் நேர்மறையான (பாசிட்டிவ்) அணுகுமுறையை போலீசார் கடைபிடிக்க வேண்டும். ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யலாம்.
கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் அடிக்கடி கொரோனா சோதனை செய்து கொள்வது அவசியம். இது அவர்களுக்கு மட்டுமல்லாது அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பானது.
இனி வரும் மாதங்கள் சற்று கடினமாக இருக்கும். எனவே பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடித்து கொரோனா தொற்றில் இருந்து போலீசார் தங்களை காத்துக் கொண்டு கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், போலீஸ் துணை கமிஷனர்கள் பாலாஜி சரவணன், உமா, முத்தரசு மற்றும் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதையடுத்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பாதுகாப்பு உபகரணங்களை கமிஷனர் சுமித்சரண் வழங்கினார்.
Related Tags :
Next Story