நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்துள்ளது விஞ்ஞானி தகவல்


நீலகிரி மாவட்டத்தில்   தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்துள்ளது   விஞ்ஞானி தகவல்
x
தினத்தந்தி 9 July 2020 4:56 AM IST (Updated: 9 July 2020 4:56 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்துள்ளது என்று விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்கிறது. நடப்பாண்டில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கினாலும், போதிய அளவு பெய்யவில்லை. அவ்வப்போது பரவலாக பெய்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து உள்ளது.

நேற்று காலை 8 மணி வரை நடுவட்டத்தில் 24 மி.மீட்டர், கீழ் கோத்தகிரியில் 43 மீ.மீ, தேவாலாவில் 35 மி.மீ என நீலகிரியில் மொத்தம் 213 மி.மீ மழை பதிவானது. இது சராசரியாக 7 மி.மீட்டர் ஆகும். குறிப்பாக தென்மேற்கு பருவமழை கூடலூர், பந்தலூர், ஊட்டியின் ஒரு பகுதியில் அதிகமாக பெய்யும்.

அதிக மழை பெய்ய வாய்ப்பு

கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் மழை பெய்யாமல் ஆகஸ்டு மாதத்தில் கனமழை கொட்டியது. இதனால் நிலச்சரிவு, சாலை துண்டிப்பு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நடப்பாண்டில் ஜூன் மாதத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு குறைவாக பதிவாகி உள்ளது. இதனால் கடந்த ஆண்டை போல் குறுகிய நாட்களில் அதிக மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மூன்று மாதங்களில் சராசரியாக 512 மி.மீ பதிவாகும். நடப்பாண்டில் 62 மி.மீ. பதிவாகியிருக்கிறது. ஜூன் மாதத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை 160 மி.மீட்டரில், 67 மில்லி மீட்டர் மழை பதிவானது. இம்மாத கடைசி அல்லது ஆகஸ்டு மாதத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும்.

1000 மி.மீட்டர்

கடந்த ஆண்டு பெய்ததை போல் குறுகிய நாட்களில் அதிக மழைப்பொழிவு காணப்படும். 3 அல்லது 4நாட்களில் 800 மி.மீ. முதல் 1000 மி.மீ. வரை மழை பொழிவு இருக்கும். தென்மேற்கு பருவமழை சராசரியை விட குறைவாக பெய்தாலும் வடகிழக்கு பருவமழை அதற்கு சமமாக பெய்ய வாய்ப்பு உள்ளது.

வருகிற டிசம்பர் மாதத்திற்குள் ஆண்டு சராசரி மழை பெய்து விடும். இருப்பினும் காலநிலை மாற்றத்தால் குறைந்த நாட்களில் அதிக மழை பொழிவு நிகழ்ந்து வருகிறது. வருகிற நாட்களிலும் இதை எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story