காய்ச்சல், சளி குறித்த விவரங்களை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் - கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள்


காய்ச்சல், சளி குறித்த விவரங்களை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் - கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 9 July 2020 5:08 AM IST (Updated: 9 July 2020 5:22 AM IST)
t-max-icont-min-icon

வீடுகளுக்கு வரும் மருத்துவ குழுவினரிடம் காய்ச்சல், சளி குறித்த விவரங்களை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட ராயப்ப முதலி தெரு, கங்லேரி ஊராட்சியில் வீடு, வீடாக நகராட்சி பணியாளர்கள் மூலம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வீடு, வீடாக சென்று கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் பிரபாகர் வழங்கி, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

மேலும் தங்களின் வீடுகளுக்கு நேரடியாக வரும் மருத்துவ குழுவினரிடம் காய்ச்சல், சளி குறித்து விவரங்களை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து கிருஷ்ணகிரி-தர்மபுரி மாவட்ட எல்லையான சப்பாணிப்பட்டியில் வாகன சோதனையை கலெக்டர் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் நகராட்சி மூலம் 6 குழுக்கள் அமைக்கப்பட்டு நாளொன்றுக்கு 4 வார்டுகள், தலைமை மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பணியாளர்கள் மூலமாக வீடு, வீடாக சென்று தூய்மை பணி, கிருமி நாசினி தெளித்தல், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல், கபசுர குடிநீர் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி-தர்மபுரி மாவட்ட எல்லையான சப்பாணிப்பட்டி சோதனைச்சாவடியில் காவல் துறை மூலம் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுகின்றன. வாகனங்களில் வருபவர்கள் இ-பாஸ் எடுத்து வருகிறார்களா? என பார்த்து அனுப்ப வேண்டும். இ-பாஸ் இல்லாமல் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைக்குள் எந்த வாகனங்களையும் அனுமதிக்க கூடாது என்று காவல் துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து காவேரிப்பட்டணம் ஒன்றியம் சவுட்டஅள்ளி ஊராட்சியில் 42 ஏக்கர் பரப்பளவில் பொதுமக்கள் பங்களிப்புடன் தூர் வாரப்பட்ட பள்ளிபட்டி ஏரியை கலெக்டர் பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், நகராட்சி ஆணையாளர் சந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேடியப்பன், சிவப்பிரகாசம் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story