மங்கலம்பேட்டை வங்கியில் பணி செய்தஊழியருக்கு கொரோனா சுகாதாரத்துறையினர் போன் மூலம் தெரிவித்ததால் சக பணியாளர்கள் அதிர்ச்சி


மங்கலம்பேட்டை வங்கியில் பணி செய்தஊழியருக்கு கொரோனா சுகாதாரத்துறையினர் போன் மூலம் தெரிவித்ததால் சக பணியாளர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 9 July 2020 5:11 AM IST (Updated: 9 July 2020 5:11 AM IST)
t-max-icont-min-icon

மங்கலம்பேட்டை வங்கியில் பணி செய்த ஊழியரை தொடர்பு கொண்ட சுகாதாரத் துறையினர் உங்களுக்கு கொரோனா உள்ளது என்று போன் மூலம் தெரிவித்தனர்.

விருத்தாசலம்,

மங்கலம்பேட்டை வங்கியில் பணி செய்த ஊழியரை தொடர்பு கொண்ட சுகாதாரத் துறையினர் உங்களுக்கு கொரோனா உள்ளது என்று போன் மூலம் தெரிவித்தனர். இதனால் சக பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர்

விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை அண்ணாசிலை தெருவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஊழியராக பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. இதையடுத்து அவர் கடந்த 2-ந் தேதி முதல் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார். இதற்கிடையே அவர் உமிழ் நீரை பரிசோதனைக்காக கொடுத்திருந்தார்.

கொரோனா உறுதி

இதற்கிடையே நேற்று காலை வங்கிக்கு வந்து தனது பணிகளை கவனிக்க தொடங்கினார். சிறிது நேரத்தில் அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், பேசியவர்கள் சுகாதாரத் துறையில் இருந்து பேசுவதாவும், உங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார்.

மேலும் சக ஊழியர்களும், அங்கிருந்த வாடிக்கையாளர்களும் இதை கேட்டதும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். அதே நேரத்தில் அங்கு பணிபுரிந்து வரும் ஊழியர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர். கொரோனா பரிசோதனைக்கு கொடுத்திருந்த ஊழியர்கள் அதன் முடிவுகள் என்ன என்று தெரிந்த பின்னர் தனது பணிக்கு திரும்பி இருந்தால், இதுபோன்ற பிரச்சினைகள் எழுந்து இருக்காது.

கிருமிநாசினி தெளிப்பு

பரிசோதனைக்காக உமிழ் நீர் எடுத்த சுகாதாரத்துறையினர் அவரை தனிமைப்படுத்தாமல் இருந்தது தற்போது தொற்று மேலும் பரவலுக்கான வழியாக அமைந்து இருக்கிறது. இது வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே மங்கலம்பேட்டை பேரூராட்சி ஊழியர்கள், சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று கிருமிநாசினி தெளித்தனர். மேலும் வங்கியையும் அவர்கள் மூடி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

Next Story