மாவட்டத்தில் இதுவரை 20,750 பேருக்கு கொரோனா பரிசோதனை - கலெக்டர் மெகராஜ் பேட்டி
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 20,750 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் மெகராஜ் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு பெண்கள் கலைக்கல்லூரியின் ஒரு கட்டிடம் படுக்கை வசதி, மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டு, கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இதை நேற்று மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் வார்டுகள் அமைக்கப்பட்டு, 100 பேர் தங்கி சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் கல்லூரி மாணவியர் விடுதியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்க தேவையான படுக்கை, சமையற்கூடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவை பார்வையிட்ட கலெக்டர், கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 940 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இந்த கல்லூரியில் மேலும் 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது 47 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்னும் ஓரிரு மாதங்களில் கூடுதல் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்பட்டால் நோயாளிகளை தங்க வைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்பதற்காக முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடைகளை இரவு 8 மணி வரை திறந்து வைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் வணிகர் சங்கத்தினர் கொரோனா பரவலை தடுக்க மாலை 5 மணிக்கு மூடி கொள்வதாக அறிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் தற்போது 70 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு விடுகின்றன. அதற்கு மேலும் கடைகள் திறந்து இருந்தால் எதுவும் செய்யமுடியாது. ஆனால் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு முதல் முறை ரூ.500-ம், தொடர்ந்து கடைபிடிக்கவில்லை எனில் ‘சீல்’ வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 20,750 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நாள்ஒன்றுக்கு சராசரியாக 700 முதல் 1,000 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. மராட்டிய மாநிலத்தில் இருந்து 24 பேர் நமது மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வந்துள்ளனர். இவர்கள் நம்மிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. அந்த மாநிலத்தில் அனுமதி பெற்றுள்ளார்களா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அனுமதிபெறாமல் வந்து இருந்தால் தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு தொடரப்படும். கரூரில் உள்ள நூற்பாலைக்கு நமது மாவட்டத்தில் இருந்து சுமார் 400 பேர் வேலைக்கு சென்று வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைக்குமார், நலப்பணிகள் இணை இயக்குனர் சித்ரா, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு பெண்கள் கலைக்கல்லூரி முதல்வர் சுகுணா, நாமக்கல் தாசில்தார் பச்சைமுத்து உள்பட மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story