வானூர் அருகே மின் கம்பம் உடைந்து விழுந்து ஊழியர் பலி மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை
வானூர் அருகே மின் கம்பம் உடைந்து விழுந்து ஊழியர் பலியானார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம்,
வானூர் அருகே மின் கம்பம் உடைந்து விழுந்து ஊழியர் பலியானார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மின்வாரிய ஊழியர்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா தென்பாலை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் தங்கமணி (வயது 24). இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வானூரை அடுத்த திருவக்கரை பகுதியில் மின் கம்பம் அமைக்கும் பணியில் இவரும், செஞ்சி தாலுகா ஈச்சூரை சேர்ந்த மற்றொரு தொழிலாளியான ஏழுமலை மகன் பிரகாஷ் (26) என்பவரும் ஈடுபட்டனர். இருவரும் மின் கம்பத்தின் மேலே ஏறி நின்று உயர்மின் பாதை அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சாலை மறியல்
அப்போது புதியதாக அமைக்கப்பட்ட அந்த மின் கம்பம் திடீரென உடைந்து விழுந்தது. இதில் மின் கம்பத்தின் மேல் நின்று பணி செய்து கொண்டிருந்த தங்கமணி, பிரகாஷ் ஆகியோர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது மின் கம்பம் விழுந்ததில் தங்கமணி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தலை, மார்பு பகுதியில் பலத்த காயமடைந்த பிரகாஷ், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த விபத்துக்கு காரணம் தரமற்ற மின்கம்பம்தான் என்று கூறி பொதுமக்கள் மற்றும் தங்கமணியின் உறவினர்கள் அப்பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 பேர் மீது வழக்கு
இதுகுறித்த தகவல் அறிந்ததும் வானூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின்வாரியத்தில் தரம் குறைந்த மின் கம்பங்களை நடுவதற்கு அனுமதியளித்தது ஏன்? என்றும் அதனால்தான் மின்கம்பம் உடைந்து விபத்து ஏற்பட்டு உயிர்பலி நடந்துள்ளது என்றும் குற்றம்சாட்டினர். பின்னர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன்பேரில் பொதுமக்கள், தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தங்கமணியின் தந்தை கோவிந்தராஜ், வானூர் போலீசில் புகார் செய்துள்ளார். அந்த புகாரில், தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஊழியர்களை பணியில் ஈடுபடுத்திய செண்டூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சவிதா, திருவக்கரை உதவி மின் பொறியாளர் ஆனந்தன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் சவிதா, ஆனந்தன் மற்றும் ஊழியர்கள் நாகராஜன், முருகன், கமலநாதன் ஆகிய 5 பேர் மீது வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story