தேசிய கால்நடை இயக்க திட்டத்தில் 90 சதவீத மானிய விலையில் ஆடுகள்


தேசிய கால்நடை இயக்க திட்டத்தில்  90 சதவீத மானிய விலையில் ஆடுகள்
x
தினத்தந்தி 9 July 2020 2:31 AM GMT (Updated: 9 July 2020 2:31 AM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை இயக்க திட்டத்தில் 5 ஒன்றியங்களில் பயனாளிகளுக்கு 90 சதவீத மானியத்தில் ஆடுகள் வழங்கப்படுகிறது.

ராமநாதபுரம்.

ராமநாதபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய கால்நடை இயக்கம் செம்மறி மற்றும் வெள்ளாடுகள் அபிவிருத்தி திட்டம், தேசிய கால்நடைகள் இயக்கம் 2019-20-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் வறட்சி பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள ஊராட்சி ஒன்றியங்கள் மாநில திட்டக்குழுவினரால் தேர்வு செய்யப்பட உள்ளன. இதன்மூலம் கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புறக்கடை வளர்ப்பு செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, கடலாடி மற்றும் போகலூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்கள் இந்த திட்டத்திற்காக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த 5 ஊராட்சி ஒன்றியங்களில் ஒரு ஒன்றியத்திற்கு 45 பயனாளிகள் வீதம் மொத்தம் 225 பயனாளிகளுக்கு இந்த ஆடுகள் வழங்கப்பட உள்ளன. இதில் மத்திய அரசின் மானியம் 60 சதவீதமும், மாநில அரசின் மானியம் 30 சதவீதமும், பயனாளியின் பங்குத்தொகை 10 சதவீதமும் ஆகும். இதற்காக ஒரு பயனாளி தனது பங்குத்தொகையாக ரூ.6,600 செலுத்த வேண்டும். நிலமற்ற மற்றும், சிறு-குறு விவசாயிகள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள விவசாயிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். இதன்மூலம் பயனாளிகளுக்கு 4 முதல் 5 மாத வயதுடைய 10 செம்மறி ஆடுகள் அல்லது வெள்ளாடுகள், 5 முதல் 6 மாத வயதுடைய 1 ஆட்டு கிடாய் வழங்கப்படும்.

தரமான ஆடுகள்

ஆடுகளுக்கு 3 வருடத்திற்கு காப்பீடு செய்யப்படும். கிடாய் ஆடுகளை குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கும், பெட்டை ஆடுகளை 3 வருடங்களுக்கும் விற்கக்கூடாது என பயனாளிகளிடம் இருந்து உறுதிமொழி ஒப்பந்தம் பெறப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளிகள் துறைசார்ந்து அமைக்கப்பட்டுள்ள குழுவினருடன் சந்தைகளிலோ அல்லது ஆடு வளர்ப்போரிடமோ தரமான வெள்ளாடு அல்லது செம்மறி ஆடுகளை தேர்வு செய்து வாங்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ஒருநாள் ஆடு வளர்ப்பு குறித்த பயிற்சி பல்கலைக்கழக பேராசிரியர்களால் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பங்களை அளிக்கலாம். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ஏஞ்சலா தெரிவித்தார்.

Next Story