தஞ்சை மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க ரூ.191 கோடியில் திட்டம் டிசம்பர் மாதத்துக்குள் பணிகளை முடிக்க தீவிரம்
தஞ்சை மாநகராட்சி பகுதி மக்களுக்காக 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க ரூ.191 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கும் வகையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் ,
தஞ்சை மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 12 விதமாக பணிகள் ரூ.904 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பூங்கா பராமரிப்பு, அகழி மேம்பாடு, குளங்கள் சீரமைத்தல், எல்.இ.டி. விளக்குகள் பொருத்துதல், 14 இடங்களில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாநகராட்சி பகுதியில் குடிநீர் அபிவிருத்தி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் ரூ.191 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே தஞ்சை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரியலூர் அருகே திருமானூரில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது போதுமானதாக இல்லை.
குடிநீர் பற்றாக்குறை
இந்த பற்றாக்குறையை சமாளிக்க தஞ்சை மாநகரில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதில் மோட்டார் பொருத்தி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதி மக்களுக்கு முழுவதுமாக கொள்ளிடம் குடிநீர் வழங்கும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து ஏற்கனவே குடிநீர் எடுக்கப்படும் இடத்தில் இருந்து 3½ கி.மீ. தொலையில் உள்ள ஒக்கக்குடியில் 2 குடிநீர் உறிஞ்சு நிலையம் அமைக்கப்படுகிறது. இதன் அருகே 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சேமிப்பு நிலையமும் அமைக்கப்படுகிறது. அங்கிருந்து ராட்சத இரும்பு குழாய்கள் மூலம் 19. கி.மீ. தொலைவில் உள்ள வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு குடிநீர் ‘குளோரினேசன்’ செய்யப்படுகிறது.
26 குடிநீர் தொட்டிகள்
இதற்காக வெண்ணாற்றில் புதிதாக 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சேமிப்பு தொட்டி கட்டப்பட்டு வருகிறது. அங்கிருந்து பிரதான குழாய்கள் மூலம் தஞ்சை மாநகரில் உள்ள 26 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இது பயன்பாட்டிற்கு வந்தால் ஒரு குடிநீர் உறிஞ்சி நிலையத்தில் இருந்து தலா 18 மில்லியன் லிட்டர் வீதம் 36 மில்லியன் லிட்டரும், திருமானூரில் செயல்படும் குடிநீர் நிலையமும் சேர்த்து மொத்தம் ஒரு நாளைக்கு 47 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்படும்.
ஒக்கக்குடியில் இருந்து குடிநீர் குழாய் கொண்டு வருவதற்காக காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு ஆகிய 4 ஆறுகளில் பாலமும் கட்டப்பட்டு வருகிறது. தஞ்சை மாநகரில் ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ள குழாய்களில் பழுது ஏற்பட்ட இடங்களிலும் புனரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக 18 கி.மீ தூரம் பகிர்மான குழாய்களும், 36 கி.மீ. தூரம் குழாய்களும் போடப்பட்டுள்ளன.
டிசம்பரில் முடிக்க திட்டம்
இந்த திட்டம் 2050-ம் ஆண்டு வரை மாநகராட்சி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இதில் கொள்ளிடம் ஆற்றில் பணிகள் தற்போது 27 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மற்ற இடங்களில் 68 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கி வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக பணிகள் தாமதமாகியது. இருப்பினும் விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது
Related Tags :
Next Story