அரியலூரில் அரசு மருத்துவக்கல்லூரி : ஜெயங்கொண்டம்-தா.பழூரில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


அரியலூரில் அரசு மருத்துவக்கல்லூரி : ஜெயங்கொண்டம்-தா.பழூரில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 9 July 2020 11:23 AM IST (Updated: 9 July 2020 11:23 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து, ஜெயங்கொண்டம்-தா.பழூரில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ஜெயங்கொண்டம், 

அரியலூரில், ரூ.347 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கு நேற்று முன்தினம் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதனை வரவேற்று ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் அ.தி.மு.க. நகர செயலாளர் பி.ஆர்.செல்வராஜ் தலைமையில், அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதில் முன்னாள் கவுன்சிலர் எஸ்.டி.துரை உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

தா.பழூர்

இதேபோல் தா.பழூரிலும், கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் தலைமையில், அக்கட்சியினர் கடைவீதியில் பட்டாசு வெடித்தனர். மேலும் அவர்கள் கடைவீதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, அரியலூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதில் ஒன்றிய அவைத்தலைவர் ராமச்சந்திரன், சுப்பிரமணியன் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story