மாவட்டத்தில் 31 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 31 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று புதிதாக 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் புதுக்கோட்டை கீழராஜ வீதியை சேர்ந்த 2 பேர், மருத்துவ கல்லூரி பகுதியை சேர்ந்த 2 பேர், செல்வம் நகரை சேர்ந்த 33 வயது பெண், காந்தி நகரை சேர்ந்த 22 வயது ஆண், எழில் நகரை சேர்ந்த 36 வயது ஆண் ஆகியோர் அடங்குவர்.
இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 449 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், ஏற்கனவே சிகிச்சையில் இருந்து 186 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 256 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 5 பேருக்கு தொற்று
அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு பிரிவு உதவியாளராக பணியாற்றி வரும் புதுக்கோட்டை மேட்டுப்பட்டியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ராணியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து கடந்த 3-ந் தேதி முதல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அலுவலகத்தில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோருக்கு கடந்த 6-ந் தேதி அன்னவாசல் அரசு மேல் நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வந்ததில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மற்றும் அலுவலக வாகன ஓட்டுனர், உதவி பணியாளர் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வங்கி ஊழியர்கள் 3 பேருக்கு...
இதேபோல, ஆலங்குடி திருவள்ளுவர் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியாற்றும் 3 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வருகிற 13-ந் தேதி வரை வங்கிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், வங்கி தொடர்பான பிரச்சினைகளை கறம்பக்குடி மற்றும் புதுக்கோட்டை எஸ்.பி.ஐ. கிளையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வங்கி பணியாளர்கள் வசிக்கும் பகுதிகளில் பேரூராட்சி மூலம் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
அறந்தாங்கி
அறந்தாங்கி நகராட்சியில், பேராவூரணி சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியின் துணை மேலாளராக இருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த வங்கி நேற்று மூடப்பட்டது. இதேபோல, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் அறந்தாங்கி பஸ் நிலைய பின்புறம், எழில் நகர், எல்.என்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையை நகராட்சி நிர்வாகம் அடைத்து உள்ளது.
அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் உள்ள எரிச்சியில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து எரிச்சி கடைத்தெருவில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. எரிச்சியில் இருந்து சிலட்டூர் செல்லும் சாலை அடைக்கப்பட்டு உள்ளது.
27 பேருக்கு பரிசோதனை
அரிமளம் ஒன்றியத்திற்கு, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் வந்த 27 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story