கரூருக்கு இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு


கரூருக்கு இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 July 2020 6:14 AM GMT (Updated: 9 July 2020 6:14 AM GMT)

கரூருக்கு இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நொய்யல், 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால், தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டுமென்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து மாவட்ட எல்லைகளில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இதேபோல் கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தின் அருகே போலீசார் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர். இதில் இ-பாஸ் வைத்திருப்பவர்களை மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கரூர் மாவட்டத்திற்குள் செல்லும் ஏராளமான இருசக்கர வாகனங்கள், கார்கள் இ-பாஸ் மற்றும் ஆவணங்கள் இல்லாமல் செல்வதாக வருவாய் துறையினருக்கு தகவல் வந்தது.

வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

அதன்பேரில், கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தலைமையில், கோட்டாட்சியர் சந்தியா மற்றும் வருவாய் துறையினர் நாமக்கல் மாவட்டத்திலிருந்து காவிரி ஆற்று பாலம் வழியாக, கரூர் மாவட்ட பகுதிக்கு வந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை நிறுத்தி ஒவ்வொன்றாக சோதனை செய்தனர்.

அப்போது இ-பாஸ் மற்றும் உரிய ஆவணங்கள் இருந்த வாகனங்களை மட்டுமே மாவட்டத்துக்குள் செல்ல அனுமதித்தனர். இ-பாஸ் இல்லாமல் வந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை இ-பாஸ் பெற்றுக்கொண்டு வருமாறு கூறி, திருப்பி அனுப்பி விட்டனர். அப்போது இது தொடர்பாக வாகனங்களில் வந்த சிலர், வருவாய் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story