நெல்லை டவுனில் வாறுகால் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
நெல்லை டவுனில் வாறுகால் அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லை டவுனில் வாறுகால் அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாறுகால் அமைக்க எதிர்ப்பு
நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக டவுன் வ.உ.சி. தெருவில் சமீபத்தில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டது. அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு கொடுக்கும் வகையில் இணைப்பு குழாயும் பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ரோட்டின் இருபுறமும் மழை நீர் வழிந்தோடும் வகையில் வாறுகால் கட்டும் பணி நேற்று தொடங்கியது. பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில் கம்பிகளை கட்டி காங்கிரீட் போட்டனர். இந்த வாறுகால் மிகவும் உயரமாகவும், சில வீடுகளின் வாசலில் பாதி அளவுக்கு அடைத்தபடியும் காணப்பட்டது. மக்கள் வீடுகளுக்குள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது. இதைக்கண்ட பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வாறுகால் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனத்தாரிடம் தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் திட்டப்பணி என்ஜினீயர்கள் வந்தனர். அவர்கள் இவ்வாறு கட்டினால் மட்டுமே தண்ணீர் வழிந்தோடும் என்று கூறினர். ஆனால் இதனை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து கட்டுமான பணி உடனடியாக நிறுத்தப்பட்டது.
பொதுமக்கள் கருத்து
இதுகுறித்து மக்கள் கூறுகையில், “வ.உ.சி. தெருவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் பெரும்பாலான வீடுகள் பழமையான வீடுகள் ஆகும். அப்போதைய நீரோட்டத்துக்கு ஏற்ப வீடுகளின் தளம் அமைக்கப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு முறையும் ரோடு போடும் போது உயரம் அதிகரித்துக் கொண்டே வந்தது.
இந்த நிலையில் வாறுகால் கட்டும் பணி ரோட்டின் மட்டத்துக்கு இல்லாமல், 3 அடிக்கு மேல் உயரமாக உள்ளது. இதனால் பெரும்பாலான பழமையான வீடுகளில் இருந்து மழை நீர், கழிவுநீர் இந்த வாறுகாலுக்கு செல்ல முடியாது. மழை காலங்களில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் வீடுகளுக்குள் தண்ணீர் குளம் போல் பெருகி விடும். மேலும் வீட்டில் கழிப்பறைகள் அனைத்தையும் உயர்த்தி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே வாறுகாலை ரோட்டின் மட்டத்துக்கு கீழ் பொது மக்கள் பாதிக்கப்படாத வகையில் கட்ட வேண்டும். தற்போது வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியே வந்து செல்ல முடியாத அளவுக்கு குறுக்கு சந்துகள், வீடுகளின் வாசல்கள் அடைக்கப்பட்டு உள்ளன. இதனை அதிகாரிகள் மறுபரிசீலனை செய்து வாறுகாலின் உயரத்தை குறைக்க வேண்டும்“ என்றனர்.
Related Tags :
Next Story