நொளம்பூரில் மினி லாரி சக்கரத்தில் சிக்கி 2 பேர் பலி


நொளம்பூரில் மினி லாரி சக்கரத்தில் சிக்கி 2 பேர் பலி
x
தினத்தந்தி 10 July 2020 4:00 AM IST (Updated: 10 July 2020 1:05 AM IST)
t-max-icont-min-icon

நொளம்பூரில் மினி லாரி சக்கரத்தில் சிக்கி நண்பர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை செங்குன்றம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(வயது 22). அதே பகுதியை சேர்ந்த இவருடைய நண்பர் பாபு(23). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு நொளம்பூர் சர்வீஸ் சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது செல்போன் அழைப்பு வந்ததால் சாலையோரம் மோட்டார்சைக்கிளை நிறுத்தி, அதில் அமர்ந்தபடியே செல்போனில் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி, முன்னால் சென்ற மினி லாரியை முந்திச்செல்ல முயன்றது. லாரிக்கு வழிவிடுவதற்காக மினிலாரியை அதன் டிரைவர் சாலையோரம் திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி, சாலையோரம் மோட்டார்சைக்கிளுடன் நின்றிருந்த கணேசன் மற்றும் பாபு மீது பயங்கரமாக மோதியது.

இதில் நண்பர்கள் இருவரும் மினி லாரியின் சக்கரத்தில் சிக்கினர். அவர்கள் மீது மினி லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் கணேசன், அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பாபு, உயிருக்கு போராடினார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரி மற்றும் போலீசார் காயங்களுடன் உயிருக்கு போராடிய பாபுவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாபு நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வில்லிவாக்கத்தை சேர்ந்த மினி லாரி டிரைவர் செல்வராஜ்(45) மற்றும் லாரி டிரைவர் மணி(57) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story