கேரளாவுக்கு இ-பாஸ் வாங்கிவிட்டு குமரிக்கு வந்த வாகனம் பறிமுதல் டிரைவர் மீது வழக்கு


கேரளாவுக்கு இ-பாஸ் வாங்கிவிட்டு குமரிக்கு வந்த வாகனம் பறிமுதல் டிரைவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 10 July 2020 4:00 AM IST (Updated: 10 July 2020 1:50 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு இ-பாஸ் வாங்கி விட்டு குமரிக்கு வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆரல்வாய்மொழி,

கேரளாவுக்கு இ-பாஸ் வாங்கி விட்டு குமரிக்கு வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சோதனை சாவடி

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட எல்லையான களியக்காவிளை, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் சோதனை சாவடிகளில் போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இ- பாஸ் வாங்கிக்கொண்டு வரும் வாகனங்களாக இருந்தாலும் அதனையும் நன்கு விசாரித்த பிறகே குமரி மாவட்டத்துக்குள் போலீசார் அனுமதிக்கின்றனர். அப்படி இருந்தும் சில நேரங்களில் போலி இ-பாஸ் மூலம் சிலர் வருவது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

கேரளாவுக்கு இ-பாஸ்

இதற்கிடையே நேற்று காலையில் ஒரு டெம்போ வாகனம் ஆட்களை ஏற்றிக்கொண்டு குமரியை நோக்கி வந்தது. ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் போலீசார் அந்த வாகனத்தை மறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது இ-பாஸ் வாங்கி இருந்தது தெரிய வந்தது. அதுவும் சென்னையில் இருந்து கேரள மாநிலத்துக்கு செல்வதற்காக இ-பாஸ் வாங்கி இருந்தனர்.

ஆனால் வாகனத்தில் இருந்த 8 பேரும் 3 குடும்பங்களை சேர்ந்தவர்கள். அவர்கள், குமரி மாவட்டம் திக்கணங்கோடு, ஆலஞ்சி, மேக்காமண்டபத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

டிரைவர் மீது வழக்கு

கேரளாவுக்கு செல்ல அனுமதி வாங்கிவிட்டு குமரி மாவட்டத்துக்குள் செல்வதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.

அந்த வாகனத்தை ஓட்டி வந்த சென்னை அண்ணாநகரை சேர்ந்த ராம்ராஜ் (வயது 33) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வாகனத்தில் வந்த 8 பேருக்கும் சளி மாதிரி எடுக்கப்பட்டு அவர்கள் தனிமப்படுத்துதல் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Next Story