பாகூரில் பரபரப்பு: ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி திடீர் நிறுத்தம் பொதுமக்கள் சாலை மறியல்
பாகூரில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி திடீரென்று நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாகூர்,
பாகூரில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி திடீரென்று நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் பிரச்சினை
புதுவை மாநிலம் பாகூர், காமராஜர் நகர், குப்பம் பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன்பேரில் மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை சார்பில் பாகூர் சித்தேரி தாங்கல் பகுதியில் 2 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கி நடந்து வந்தது.
இந்தநிலையில் நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் திடீரென்று பணிகள் நிறுத்தப்பட்டன. இதை அறிந்து அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து, ஆழ்துளை கிணறு அமைக்கும் பகுதியில் இருந்த பொதுப்பணித்துறை அதிகாரியிடம், பணிகள் ஏன் நிறுத்தப்பட்டது என்று கேட்டு முறையிட்டனர்.
கவர்னர் உத்தரவு
அதற்கு, ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தனி நபர் ஒருவர் கவர்னரிடம் மனு கொடுத்துள்ளதாகவும், கவர்னரின் உத்தரவின் பேரில் இந்த பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நேற்று மாலை 4 மணியளவில் பாகூர் - கன்னியக்கோவில் சாலையில் தூக்குப்பாலம் என்ற இடத்தில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்துபோகச் செய்தனர். இதையடுத்து அவர்கள் ஆழ்துளை கிணறு அமைக்கும் பகுதிக்கு சென்று முற்றுகையிட்டனர். ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தொடங்கவேண்டும், அப்போதுதான் அங்கிருந்து செல்வதாக தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் பேச்சுவார்த்தை
உடனே பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், வடிவழகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தாகோதண்டராமன், கிராம முக்கிய பிரமுகர்களிடம் செல்போனில் பேசி, உங்கள் கோரிக்கைகள் குறித்து கவர்னரிடம் மனுவாக கொடுத்தால், நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது போராட்டம் நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தினார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
நீண்ட நாள் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென்று ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த பிரச்சினை குறித்து கவர்னர் கிரண்பெடியிடம் மனு கொடுக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story