சேலம் காந்தி மைதானத்தில் அமைக்கப்பட்ட கொரோனா தனிமை வார்டில் கூடுதல் படுக்கை வசதி


சேலம் காந்தி மைதானத்தில் அமைக்கப்பட்ட கொரோனா தனிமை வார்டில் கூடுதல் படுக்கை வசதி
x
தினத்தந்தி 9 July 2020 10:27 PM GMT (Updated: 9 July 2020 10:27 PM GMT)

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமை வார்டில் கூடுதல் படுக்கை வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களில் 600-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

மற்றவர்கள் சேலம், மேட்டூர், ஆத்தூர் அரசு மருத்துவமனைகளிலும், சேலத்தில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர வெளி மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சேலத்திற்கு வருபவர்களை தனிமைப்படுத்துவதற்கு கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி, பெரியார் பல்கலைக்கழகம், கோரிமேடு அரசு மகளிர் கல்லூரி ஆகிய இடங்களில் தனிமை வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்திய தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சாய் விடுதி மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சேலம் காந்தி விளையாட்டு மைதானம் உள் அரங்கம் ஆகியவை கொரோனா தனிமை முகமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கு தேவையான படுக்கை வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே 62 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் மேலும் கூடுதல் படுக்கைகள் அங்கு கொண்டு வரப்பட்டு அதனை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாகவே கடந்த 3 மாதங்களாக சேலம் காந்தி விளையாட்டு மைதானம் மூடப்பட்டுள்ளது. அங்கு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் தற்போது 3 மாதங்களாக யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் சேலம் காந்தி விளையாட்டு மைதானம் கொரோனா தனிமைமையமாக மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story