கடலூரில், சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை விற்க தடை; 7 வாகனங்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை


கடலூரில், சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை விற்க தடை; 7 வாகனங்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 10 July 2020 5:00 AM IST (Updated: 10 July 2020 4:59 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை விற்க தடை செய்யப்பட்டது.

கடலூர் முதுநகர், 

கடலூரில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை விற்க தடை செய்யப்பட்டது. இதை மீறி விற்பனை செய்த மீன்களை வாங்கி சென்ற 7 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சுருக்குமடி வலைக்கு தடை

கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த 1-ந்தேதி தடையை மீறியும், 144 தடையை மீறியும் மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முற்பட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் துறைமுகத்தில் சுருக்குமடி வலையுடன் இருந்த படகுகளை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளின் வாகனங்களை சிறை பிடித்தனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் கலெக்டர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு மீனவர்கள் சென்றபோது, அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து தேவனாம்பட்டினம் மீனவர்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். மறுநாள் அவர்களை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், உயர் அதிகாரிகளிடம் பேசி 8-ந்தேதி பதில் சொல்வதாக தெரிவித்தார். ஆனால் நேற்று முன்தினம் எதுவும் சொல்லவில்லை.

இந்நிலையில் நேற்று மீனவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சுருக்குமடி வலையை பயன்படுத்தக்கூடாது என்பது அரசின் கொள்கை முடிவு. இது பற்றி கோர்ட்டிலும் வழக்கு உள்ளது. ஆகவே சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று உத்தரவிட்டார். இதை கேட்ட மீனவர்கள் திரும்பி சென்றனர். இதையடுத்து சில மீனவர்கள் தடையைமீறி நேற்று காலை சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க சென்றனர்.

கண்காணிப்பு

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், உதவி இயக்குனர் ரம்யா லெட்சுமி மற்றும் அதிகாரிகள் 3 குழுக்களை அமைத்து, சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வரும் மீனவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் மீன்களை விற்பனை செய்யவும் தடை விதித்தனர். இதையடுத்து இந்த குழுவினர் சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடித்த மீன்களுடன் மீனவர்கள் யாராவது துறைமுகத்திற்கு வருகிறார்களா? என்று கண்காணித்தனர். ஆனால் அவர்கள் யாரும் வரவில்லை. மாறாக அவர்கள் புதுச்சேரி மூர்த்திக்குப்பம், நல்லவாடு பகுதிக்கு சென்று தாங்கள் பிடித்த மீன்களை விற்பனை செய்தனர். இது பற்றி கடலூர் மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தது.

மீன்விற்பனை செய்ய தடை

இதைத்தொடர்ந்து அவர்கள் புதுச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அங்கு கடலூர் மாவட்ட மீனவர்கள் மீன்களை விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது என்றனர். இதையடுத்து அவர்கள் கடலூர் மாவட்ட மீனவர்களை திருப்பி அனுப்பினர். அதன்படி மீனவர்கள் தாங்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடித்த மீன்களை மாலையில் தாழங்குடா பகுதியில் விற்பனை செய்ய வந்தனர். இந்த மீன்களை வாங்குவதற்கும் வியாபாரிகள் வாகனங்களில் வந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் அங்கு அதிகாரிகள், போலீசார் விரைந்து சென்றனர்.

வாகனங்கள் பறிமுதல்

பின்னர் அங்குள்ள மீனவர்களிடம் மீன்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதனால் மீனவர்கள் கொண்டு வந்த மீன்களை வியாபாரிகள் வாங்கவில்லை. இதனால் மீன்கள் அழுகும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் தாழங்குடாவில் இருந்து அதிகாரிகளுக்கு தெரியாமல் மீன்களை ஏற்றி வந்த 3 வாகனங்கள், புதுச்சத்திரம் பகுதி வழியாக சென்ற 2 லாரிகள், பரங்கிப்பேட்டை பகுதி வழியாக சென்ற ஒரு வாகனம், குள்ளஞ்சாவடி வழியாக சென்ற ஒரு லாரி என 7 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு

இந்த நிலையில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அறிந்த மீனவர்கள், கடலூர் துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இதில் பல மீன்கள் சாதாரண மீன்பிடி வலைகளில் பிடிக்கப்பட்டது என்று கூறி கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால் சுதர் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கடலூர் துறைமுக மீன் வியாபாரிகள் சங்க உறுப்பினர்களும் திரண்டு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் கூறுகையில், நாங்கள் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் மீனவர்கள் பிடித்து வரும் எந்த ஒரு மீன்களையும் வாங்கப் போவதில்லை என தெரிவித்தனர் மேலும் ஐஸ் பேக்டரிகளும் இயங்காது என்று கூறினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story