விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 38 பேருக்கு கொரோனா கடலூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,488 ஆக உயர்ந்தது
விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
கடலூர்,
விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,488 ஆக உயர்ந்தது.
38 பேருக்கு உறுதி
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,450 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று சிலரது பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் 38 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் விருத்தாசலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கிருமிநாசினி தெளிப்பு
இதையடுத்து போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. இதேபோல் மங்களூரை சேர்ந்த அரசு பணியாளர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். இது தவிர சென்னையில் இருந்து விருத்தாசலம், மங்களூர் வந்த 3 பேர், மராட்டிய மாநிலத்தில் இருந்து விருத்தாசலம் வந்த 2 பேர், மங்களூர் வந்த ஒருவர், கேரளாவில் இருந்து விருத்தாசலம் வந்த ஒருவர், தெலுங்கானாவில் இருந்து கடலூர் வந்த ஒருவர், நல்லூரை சேர்ந்த கர்ப்பிணி, கொரோனா அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட விருத்தாசலம், கம்மாபுரம், கீரப்பாளையம், சிதம்பரம், நெய்வேலி, நல்லூர், வடலூர், மங்களூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 27 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1488 ஆக உயர்ந்தது. நேற்று 22 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இது வரை 993 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் உயிரிழந்தனர். இது தவிர 496 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் கட்டுப்பாட்டு பகுதிகள் 88 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story