வேலூர் மண்டித்தெரு, மெயின்பஜார் உள்பட 12 பகுதிகளில் கடைகள் திறப்பு - நகர்நல அலுவலர் ஆய்வு


வேலூர் மண்டித்தெரு, மெயின்பஜார் உள்பட 12 பகுதிகளில் கடைகள் திறப்பு - நகர்நல அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 10 July 2020 5:32 AM IST (Updated: 10 July 2020 5:32 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மண்டித்தெரு, சுண்ணாம்புக்காரத்தெரு, மெயின்பஜார் உள்பட 12 பகுதிகளில் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இப்பகுதிகளில் மாநகராட்சி நகர்நல அலுவலர் சித்ரசேனா ஆய்வு செய்தார்.

வேலூர், 

வேலூர் மண்டித்தெரு அரிசிக்கடை உரிமையாளர் மற்றும் அந்த கடையில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, சுண்ணாம்புகாரத்தெரு, மெயின்பஜார் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் கடைகள் திறப்பது தொடர்பான கட்டுப்பாட்டில் தளர்வுகள் அளித்து கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து நேதாஜி மார்க்கெட், லாங்குபஜார், மண்டித்தெரு உள்ளிட்ட பகுதி கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வணிகர் சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் நேற்று முன்தினம் கலெக்டர் சண்முகசுந்தரம், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் சங்கரன் ஆகியோர் அந்த பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மண்டித்தெரு, சுண்ணாம்புகாரத்தெரு, மெயின்பஜார், காந்திரோடு உள்பட 12 பகுதிகளில் சுழற்சி முறையில் நேற்று முதல் கடைகள் திறக்க கலெக்டர் அனுமதி அளித்தார்.

இந்த நிலையில் அப்பகுதிகளில் இரும்பு தகடுகளால் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை அகற்றினர். அதைத்தொடர்ந்து வியாபாரிகள், பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் அந்த வழியாக சென்றனர். சுழற்சி அடிப்படையில் சாலையின் ஒருபுறம் அமைந்துள்ள கடைகள் மட்டுமே திறக்கப்பட்டன. மற்றொரு பகுதியில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டது. கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியில் சாலையோர வியாபாரிகள் கடைகள் அமைத்திருந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்த பகுதிகளில் உள்ள கடைகளில் அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று மாநகராட்சி நகர்நல அலுவலர் சித்ரசேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வியாபாரிகளிடம் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடி நிற்க அனுமதிக்க கூடாது. முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது 2-வது மண்டல உதவிகமிஷனர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story