கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் அதிகாரி தகவல்
கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் என்று தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வாமலை தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் என்று தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பருவநிலை மாற்றம்
கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு பருவத்தில் மரவள்ளி, மஞ்சள், சின்னவெங்காயம் மற்றும் மிளகாய் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம். பருவ நிலை மாற்றம் காரணமாக வழக்கமாக பெய்யும் மழை சுழற்சியானது ஆண்டுக்கு ஆண்டு மாறிக் கொண்டே வருகிறது. இதனால் குறித்த நேரத்தில் ஆரம்பிக்க வேண்டிய உழவுப் பணிகள் தொடங்கி வயலில் சாகுபடி செய்த பயிர்களை அறுவடை செய்வது வரை அனைத்து பணிகளின் சுழற்சியும் மாறுபடுகிறது. எதிர்பார்க்கும் மழை பெய்யாமல் போனாலோ அல்லது அதிக அளவு மழை பெய்தாலோ விதைப்பு மற்றும் நடவு பணிகளை தொடர முடியாமல் போகும். மேலும் சில நேரங்களில் பயிர்கள் சேதமடையும். எனவே விவசாயிகளுக்கு ஏற்படும் இந்த எதிர்பாராத இழப்புகளை சரி செய்வதற்காக பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடைசி நாள்
ஹெக்டேர் ஒன்றுக்கு மஞ்சள் பயிருக்கு ரூ.4693, சின்ன வெங்காயத்துக்கு ரூ.1969, மரவள்ளி கிழங்குக்கு ரூ.3627, மிளகாய்க்கு ரூ. 10497-ஐ பிரிமீயமாக செலுத்தி விவசாயிகள் காப்பீடு செய்ய வேண்டும். மஞ்சள், சின்ன வெங்காயம், மிளகாய் ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் வருகிற 30-ந்தேதி ஆகும். மரவள்ளி கிழங்குக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் வருகிற 31-8-2020 ஆகும். இந்த திட்டத்தில் பயன் பெற ஆதார் எண், சிட்டா, அடங்கல், வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் புகைப்படம் போன்ற ஆவணங்களை விவசாயிகள் வழங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களை விவசாயிகள் அணுகலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story