நாகை மீனவர் வலையில் சிக்கிய 250 கிலோ ராட்சத மீன்; சக மீனவர்கள் மகிழ்ச்சி


நாகை மீனவர் வலையில் சிக்கிய 250 கிலோ ராட்சத மீன்; சக மீனவர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 10 July 2020 6:58 AM IST (Updated: 10 July 2020 6:58 AM IST)
t-max-icont-min-icon

நாகை மீனவர் வலையில் 250 கிலோ எடையுள்ள ராட்சத மீன் சிக்கியது. இதனால் சக மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை செல்வம் என்பவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் சக மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.

பைபர் படகில் குறைந்த தூரம் மட்டுமே சென்று மீன்பிடிக்க முடியும் என்பதால் குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் கடலில் வலையை விரித்து மீன்களுக்காக அவர்கள் காத்திருந்தனர். அப்போது இடி மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது. இதையடுத்து சோகமடைந்த மீனவர்கள், அவசர அவசரமாக கரைக்கு திரும்ப முற்பட்டனர்.

அப்போது அவர்கள், தாங்கள் கடலில் விரித்த வலையை இழுத்தனர். அப்போது அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. மீனவர்கள் வலையை இழுத்தபோது எதிர் திசையில் படகு இழுத்து செல்லப்பட்டது. இதனால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவர்கள் போராடி வலையை இழுத்தபோது ராட்சத மீன் அவர்கள் விரித்த வலையில் சிக்கியிருப்பது தெரிய வந்தது.

மிகுந்த போராட்டத்துக்கிடையே ஒருவழியாக மீனை படகுக்கு கொண்டு வந்தனர். அப்போதுதான் அந்த மீன் ஆழ்கடலில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஏற்றுமதி ரக மீன் என்பது தெரியவந்தது. 15 அடி நீளமும், 250 கிலோ எடை கொண்டதாகவும் அந்த மீன் இருந்தது.

இதையடுத்து படகை கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள், சக மீனவர்களின் உதவியுடன் அந்த மீனை படகில் இருந்து வெளியே எடுத்து வந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஏராளமானோர் நாகை கடற்கரைக்கு வந்து பிடிபட்ட ராட்சத மீனை பார்வையிட்டு சென்றனர்.

இந்த மீன் ஏற்றுமதி செய்யப்பட்டால் கிலோ 300-க்கு விற்பனை செய்யப்படும் என்றும், தற்போது ஊரடங்கு காலத்தில் அது சாத்தியமில்லாததால், கிலோ ரூ.100-க்கு குறைவாகவே விற்பனையானது என்றும் மீனவர்கள் தெரிவித்தனர். விசைப்படகுகளிலேயே பெரும்பாலும் சிக்கக்கூடிய இந்த மீன் பைபர் படகில் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்து உள்ளதாக சக மீனவர்கள் தெரிவித்தனர்.


Next Story