தென்னிலை அருகே கார்கள் மோதல்; 2 பேர் பலி


தென்னிலை அருகே கார்கள் மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 10 July 2020 2:02 AM GMT (Updated: 10 July 2020 2:02 AM GMT)

தென்னிலை அருகே கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். போலீஸ் ஏட்டு உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் செந்தில்குமார் (வயது 43). இவரது உறவினர்கள் திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த ரவி (60), கருப்பசாமி (50). இவர்கள் 2 பேரும் தொழில் விஷயமாக அடிக்கடி அரவக்குறிச்சி வந்து செல்வர். அதேபோல், அரவக்குறிச்சி வந்திருந்த அவர்கள், செந்தில்குமாருடன் சேர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன் வெள்ளக்கோவிலில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு ஒரு காரில் சென்றனர். அங்கு நிகழ்ச்சியை முடித்து விட்டு, 3 பேரும் அதே காரில் வெள்ளக்கோவிலில் இருந்து அரவக்குறிச்சிக்கு வந்து கொண்டிருந்தனர்.

காரை ஏட்டு செந்தில்குமார் ஓட்டி வந்துள்ளார். அவர்கள், நேற்று அதிகாலை கரூர் மாவட்டம், தென்னிலையை அடுத்துள்ள வைரமடை அருகே வந்தபோது, திருவாரூரில் இருந்து வந்த கார், எதிர்பாராதவிதமாக செந்தில்குமார் வந்த காரின் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில், கார்களின் இடிபாடுகளில் சிக்கி போலீஸ் ஏட்டு செந்தில்குமார், ரவி, கருப்பசாமி மற்றும் திருவாரூரில் இருந்து வந்த காரை ஓட்டி வந்த டிரைவர் சந்தோஷ் (25), சித்ரா (35), தரணிதரன் (9), தீபன்ராஜ் (12) ஆகிய 7 பேரும் காயமடைந்தனர். இதைக்கண்டதும் அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் தென்னிலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், தென்னிலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, படுகாயமடைந்த 7 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரவி, கருப்பசாமி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

ஏட்டு செந்தில்குமார் உள்பட 5 பேரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஏட்டு செந்தில்குமார், தரணிதரன் ஆகிய 2 பேர் மட்டும் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சந்தோஷ், சித்ரா, தீபன்ராஜ் ஆகிய 3 பேரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story