அவதூறாக பேசியவரை கைது செய்யக்கோரி கிராம செவிலியர்கள் 2-வது நாளாக பணியை புறக்கணித்து போராட்டம்


அவதூறாக பேசியவரை கைது செய்யக்கோரி கிராம செவிலியர்கள் 2-வது நாளாக பணியை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 10 July 2020 9:01 AM IST (Updated: 10 July 2020 9:01 AM IST)
t-max-icont-min-icon

அவதூறாக பேசியவரை கைது செய்யக்கோரி கிராம செவிலியர்கள் 2-வது நாளாக பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். திருச்சியில் கலெக்டரிடம் மனு கொடுக்க திரண்டனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் புதூர் உத்தமனூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு உட்பட்ட வி.துறையூர் கிராமத்தில் பணிபுரிந்து வரும் கிராம சுகாதார செவிலியர் சந்தோஷமேரி. அதேபகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவியான கர்ப்பிணிக்கு கொரோனா உறுதியானது. அங்குள்ள ஆரம்ப சுகாதார செவிலியர்கள் தகவலின் பேரில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி சேர்க்கப்பட்டார்.

இதற்கிடையே செவிலியர்களால்தான் தனது மனைவிக்கு கொரோனா இருப்பது ஊருக்கெல்லாம் தெரிந்து விட்டது என எண்ணி, கணவர் சண்முகம் செவிலியர் சந்தோஷமேரியை தொலைபேசியில் தொடர்புகொண்டு தகாத வார்த்தையால் பேசி அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து சந்தோஷமேரி சமயபுரம் போலீசில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சண்முகத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று முன்தினமே கிராமப்புறங்களில் உள்ள ஆரம்பசுகாதார நிலையத்தில் பணியாற்றும் கிராம செவிலியர்கள் தங்களது தடுப்பூசி பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக புறநகர் பகுதியில் உள்ள 320 கிராமப்புற செவிலியர்களும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதற்கிடையே தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்க மாவட்ட தலைவர் காயத்ரி தலைமையில், செயலாளர் ஜெயசுந்தரி, துணைத்தலைவர் உமாகாந்தி, பொருளாளர் சாந்தி உள்ளிட்ட திரளான செவிலியர்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் வெளியே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சம்பந்தப்பட்டவரை கைது செய்யும் வரை பணி புறக்கணிப்பு தொடரும் என்று செவிலியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். பின்னர் கலெக்டரை சந்தித்து முறையிட்டனர்.

Next Story