நெல்லை-தூத்துக்குடியில் புதிதாக 340 பேருக்கு கொரோனா: நகைக்கடை அதிபர் உள்பட மேலும் 2 பேர் பலி தென்காசியில் 9 பேருக்கு தொற்று
நெல்லை, தூத்துக்குடியில் கொரோனாவுக்கு நகைக்கடை அதிபர் உள்பட மேலும் 2 பேர் பலியானார்கள். புதிதாக 340 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
நெல்லை,
நெல்லை, தூத்துக்குடியில் கொரோனாவுக்கு நகைக்கடை அதிபர் உள்பட மேலும் 2 பேர் பலியானார்கள். புதிதாக 340 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதிகரிக்கும் தொற்று
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,551 ஆக உயர்ந்துள்ளது. இதில் 765 பேர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 777 பேர் நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
நெல்லை மாநகர்
நெல்லை மாநகரில் நேற்றும் 40-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தச்சநல்லூர் மண்டலத்தில் கிருஷ்ணன் கோவில் தெரு, சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோவில் தெரு, மேகலிங்கபுரம் ரோடு, சந்திப்பு போலீஸ் நிலைய குடியிருப்பு, சன்னியாசி கிராமம், வண்ணார்பேட்டை ஆகிய பகுதிகளில் 18 பேருக்கும், பாளையங்கோட்டையில் ஆயுதப்படை ரோடு, ஐகிரவுண்டு, கிருஷ்ணன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 15 பேருக்கும், மேலப்பாளையம் மண்டலத்தில் தியாகராஜநகர், ராமச்சந்திரா நகர் உள்ளிட்ட பகுதியில் 10 பேருக்கும், நெல்லையில் டவுன் போலீஸ் குடியிருப்பு, பழைய பேட்டை உள்ளிட்ட பகுதியில் 5 பேருக் கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அவர்கள் நேற்று ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
நகைக்கடை உரிமையாளர் பலி
களக்காடு விஸ்வகர்மா தெருவை சேர்ந்த 60 வயது ஆண் ஒருவர் களக்காடு பழைய பஸ் நிலையத்தில் நகைக்கடை நடத்தி வந்தார். இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் கடந்த 30-ந் தேதி அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இதனால் நெல்லை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்து உள்ளது.
ஆஸ்பத்திரி வார்டு மூடல்
நெல்லை ஐகிரவுண்டில் 7 மாடிகளை கொண்ட மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூச்சு திணறலால் ஒரு மூதாட்டி அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று பிற்பகலில் பரிசோதனை முடிவில் அந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் உடனடியாக அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். அவர் ஏற்கனவே தங்க வைக்கப்பட்டிருந்த வார்டு மூடப்பட்டது. மேலும் அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீடுகளுக்கும், வேறு ஆஸ்பத்திரிகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனால் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் நேற்று மாலை பரபரப்பாக காணப்பட்டது.
தூத்துக்குடியில் ஒருவர் சாவு
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகின்றனர். இங்கு இதுவரை சிகிச்சை பெற்று வந்த 11 பேர் இறந்து உள்ளனர்.
இந்த நிலையில் கோவில்பட்டியை சேர்ந்த 61 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் மையவாடியில் பாதுகாப்பாக அடக்கம் செய்யப்பட்டது. இதனால் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக அதிகரித்து உள்ளது.
195 பேர் பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி கருவூலத்தில் பணியாற்றி வந்த பணியாளருக்கும், தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் 2 போலீஸ்காரர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் போலீஸ் நிலையம் மூடப்பட்டு மருந்து தெளிக்கப்பட்டது.
அதே போல் கலெக்டர் அலுவலக பணியாளர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பல அலுவலகங்களுக்குள் வேறு நபர்கள் செல்ல முடியாதபடி கயிறு கட்டி வைத்து உள்ளனர். அதில் வேப்பிலையையும் கட்டி வைத்து உள்ளனர்.
நேற்று தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 80 பேருக்கும், ராமச்சந்திராபுரம், கோவில்பட்டி, நாலாட்டின்புத்தூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,949-ஆக அதிகரித்து உள்ளது.
தென்காசி மாவட்டம்
இதேபோல் தென்காசி மாவட்டத்தில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 598-ஆக உயர்ந்துள்ளது. இதில் 299 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 298 பேர் தென்காசி அரசு ஆஸ்பத்திரி மற்றும் நெல்லை அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த 3 மாவட்டங்களை சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story