திசையன்விளையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்பதுரை எம்.எல்.ஏ. ஆய்வு


திசையன்விளையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்பதுரை எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 11 July 2020 4:30 AM IST (Updated: 11 July 2020 12:08 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்பதுரை எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு செய்தார்.

திசையன்விளை, 

திசையன்விளையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்பதுரை எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு செய்தார்.

ஆய்வு

ராதாபுரம் தொகுதி திசையன்விளை நகரப்பஞ்சாயத்து பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தினரால் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திசையன்விளை நகரப்பஞ்சாயத்து அலுவலகத்திற்கு இன்பதுரை எம்.எல்.ஏ. நேற்று சென்றார். அங்கு செயல் அலுவலர் மற்றும் நகரப்பஞ்சாயத்து அலுவலர்களுடன் திசையன்விளையில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

தற்போது நெல்லை மாவட்டத்தில் மூலைக்கரைப்பட்டி, ஏர்வாடி, நாங்குநேரி உள்ளிட்ட 5 நகரப்பஞ்சாயத்துகளை சேர்ந்த மஸ்தூர் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 70 பேர் திசையன்விளை நகருக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தெருத்தெருவாக சென்று கிருமிநாசினி தெளித்தல், தூய்மைப்பணி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

வீடு வீடாக சோதனை

மேலும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் ஒன்றை சுகாதாரத்துறை மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 3 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் திசையன்விளையில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் சென்று சளி, காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என ஆய்வுகள் மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.

திசையன்விளை பஜாரில் அமைந்துள்ள காய்கறி மார்க்கெட்டை இட்டமொழி சாலையில் உள்ள வாடகை வேன் நிறுத்த பகுதியில் அமைப்பது மற்றும் மீன் சந்தையை நாங்குநேரி சாலையில் உள்ள ஜெயராஜேஷ் பள்ளி அருகில் மாற்றி அமைப்பது எனவும் நகரப்பஞ்சாயத்து நிர்வாகத்தால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அறிவுரை

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் மதியம் 2 மணிக்கு மேல் திசையன்விளை நகரில் கடைகளை அடைக்க வியாபாரிகள் சங்கத்தினர் முடிவெடுத்து உள்ளனர். எனவே அந்த சமயம் திசையன்விளை நகர பகுதியில் பொதுமக்கள் அதிக அளவில் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும், சமூக விலகலை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்குவது உள்ளிட்ட பணிகளுக்காகவும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்தும் இன்பதுரை எம்.எல்.ஏ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

இந்த ஆய்வின் போது அ.தி.மு.க நிர்வாகிகள் அந்தோணி அமலராஜா, பழனிசங்கர், ஜெயக்குமார் உள்ளிட்ட பேருராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story