முந்தைய செயல்பாடுகள்படி மதிப்பெண் கர்நாடகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் அறிவிப்பு


முந்தைய செயல்பாடுகள்படி மதிப்பெண் கர்நாடகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 July 2020 4:15 AM IST (Updated: 11 July 2020 12:39 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் அறிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் அறிவித்துள்ளார்.

தேர்வுகள் ரத்து

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. ஆனால் மாநிலத்தில் கொரோனா தற்போது தாண்டவமாட தொடங்கியுள்ளது. அதனால் அந்த கல்லூரி தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து உயர்கல்வித்துறையை நிர்வகிக்கும் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் கல்லூரி தேர்வுகளை நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்லூரி, முதுநிலை பாடப்பிரிவுகள், பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு 2019-20-ம் ஆண்டிற்கான தேர்வுகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

வேலை வாய்ப்புகள்

அவர்களுக்கு முந்தைய செயல்பாடுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். கல்லூரி கடைசி ஆண்டு மாணவர்களின் கடைசி செமஸ்டர் தேர்வு மட்டும் நடத்தப்படும். வருகிற செப்டம்பர் மாதத்திற்கு முன்பு இந்த தேர்வு நடத்தி முடிக்கப்படும். மாணவர்களின் எதிர்கால வேலை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை நிபுணர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோனைகளை கேட்டு அறிந்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு பல்கலைக்கழகங்களின் வேந்தரான கவர்னரும் ஒப்புதல் வழங்கியுள்ளார். நடப்பு ஆண்டின் கல்வி நிலையை கொரோனா சீரழித்துவிட்டது. வகுப்புகளை நடத்தி முடிக்காத நிலை உருவாகிவிட்டது.

தீவிரமாக ஆலோசனை

ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. கடைசி நிலையில் உள்ள மாணவருக்கும் ஆன்லைன் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு தீவிரமாக முயற்சி மேற்கொண்டு செயலாற்றியது. இதற்கிடையே கல்லூரிகளை திறக்கவும், தேர்வுகளை நடத்தவும் அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தியது.

ஆனால் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால், நாங்கள் இந்த ஆலோசனையை கைவிட்டுவிட்டோம். அதனால் தான் கல்லூரி மாணவர்கள் அனைவரையும் தேர்வு இன்றி தேர்ச்சி அடைய செய்வது என்று தீர்மானித்தோம். முந்தைய ஆண்டு மற்றும் முந்தைய செமஸ்டர்களில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் செயல்பாடுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

தேவையான ஏற்பாடுகள்

இதில் குறைவாக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் விரும்பினால், அவர்கள் அடுத்த செமஸ்டர் தேர்வின்போது அந்த பாடத்திற்குரிய தேர்வை எழுதலாம். 2020-21-ம் கல்வி ஆண்டிற்கான ஆன்லைன் வகுப்புகள் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி தொடங்கும். ஆப்லைன் அதாவது நேரடி வகுப்புகள் அக்டோபர் 1-ந் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரசின் பிடியில் சிக்காமல் மாணவர்களை காக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டியதும் முக்கியம். மாணவர்களுக்கு ஏதாவது சந்தேகம் எழுந்தால் அவர்கள் 080-22341394 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Next Story