பாகூர் சட்டமன்ற தொகுதி தனவேலு எம்.எல்.ஏ. பதவி பறிப்பு சபாநாயகர் அதிரடி உத்தரவு


பாகூர் சட்டமன்ற தொகுதி தனவேலு எம்.எல்.ஏ. பதவி பறிப்பு சபாநாயகர் அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 10 July 2020 11:30 PM GMT (Updated: 10 July 2020 7:19 PM GMT)

காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்ட பாகூர் சட்டமன்ற தொகுதி தனவேலு எம்.எல்.ஏ.வின் பதவியை பறித்து சபாநாயகர் சிவக்கொழுந்து அதிரடியாக உத்தரவிட்டார்.

புதுச்சேரி, 

புதுவை மாநிலம் பாகூர் தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர் தனவேலு.

கடும் விமர்சனம்

பாகூர் சட்டமன்ற தொகுதியில் அரசு சார்பில் வளர்ச்சிப் பணிகள் சரிவர நடைபெறுவதில்லை என்று தொடக்கம் முதலே குற்றம் சாட்டி வந்தார். சட்டமன்ற கூட்டங்களின் போது முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் இதுகுறித்து நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களை ஆளுங்கட்சியில் இருந்து கொண்டே தனவேலு சட்டமன்றத்தில் விமர்சித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதி மற்றும் மருந்து போன்றவை இல்லை என்று புகார் தெரிவித்து ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு தனவேலு எம்.எல்.ஏ. போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போதும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களை கடுமையாக விமர்சித்தார்.

தற்காலிகமாக நீக்கம்

ஆளுங்கட்சியில் இருந்து கொண்டே அரசை விமர்சித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த அமைச்சர் நமச்சிவாயத்திடம் புகார் அளித்தனர். அதன்படி ஜனவரி 19-ந் தேதி தனவேலு எம்.எல்.ஏ. காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து ஜனவரி 29-ந் தேதி கவர்னரை சந்தித்து தனவேலு எம்.எல்.ஏ. முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை வழங்கினார். இது புதுவை அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து தன வேலுவை தகுதி நீக்கம் செய்து (எம்.எல்.ஏ. பதவி பறிப்பு) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் அரசு கொறடாவான அனந்த ராமன் எம்.எல்.ஏ. ஜனவரி 30-ந் தேதி மனு கொடுத்தார்.

ஐகோர்ட்டு உத்தரவு

இந்தநிலையில் தன் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் தனவேலு எம்.எல்.ஏ. வழக்கு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தனவேலு எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கும் முன்பாக அவருக்கு விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்த தனவேலு எம்.எல்.ஏ. தான் விளக்கம் அளிக்கும்போது வக்கீல்களும் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு சபாநாயகர் அனுமதி அளித்தார்.

அதன்படி பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வக்கீல்களுடன் சட்டசபைக்கு வந்து சபாநாயகரை சந்தித்து தனவேலு எம்.எல்.ஏ. விளக்கமளித்தார். அதன்பிறகு மார்ச் 19-ந் தேதி சபாநாயகர் முன்பு ஆஜரான தனவேல் எம்.எல்.ஏ. தனக்கு எதிரான சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதன்பின் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவரது வக்கீல்கள் சென்னையில் இருந்து வர முடியாததை காரணம் காட்டி சபாநாயகர் முன் தனவேலு எம்.எல்.ஏ. ஆஜராகவில்லை.

பதவி பறிப்பு

இந்தநிலையில் கடந்த (ஜூன்) மாதம் 3-ந் தேதி தனது முன் ஆஜராகி விளக்கமளிக்க இறுதி வாய்ப்பு அளிப்பதாக சபாநாயகர் சிவக்கொழுந்து, தனவேலு எம்.எல்.ஏ.வுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதன்படி அன்றைய தினம் தனவேலு எம்.எல்.ஏ. சபாநாயகர் முன்பு ஆஜரானார். அப்போது கொரோனா காரணமாக வக்கீல்கள் வர முடியாததால் மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த சூழலில் நேற்று தனவேலு எம்.எல்.ஏ.வின் பதவியை பறித்து சபாநாயகர் சிவக்கொழுந்து அதிரடியாக உத்தரவிட்டு நடவடிக்கை மேற்கொண்டார்.

உத்தரவு விவரம்

இதுகுறித்து புதுச்சேரி சட்டசபை செயலர் முனிசாமி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான தனவேலுவை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டி கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி மற்றும் 30-ந் தேதி ஆகிய இரு தினங்களில் சட்டசபை சபாநாயகர் சிவக்கொழுந்திடம் மனு அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் சபாநாயகர் தகுதி நீக்கம் தொடர்பாக தனவேலு எம்.எல்.ஏ.விடம் பல்வேறு நாட்களில் விசாரணை நடந்தது. அதன் முடிவில் இன்று (நேற்று) சபாநாயகர் சிவக்கொழுந்து பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனவேலுவை தகுதி நீக்கம் (பதவி பறிப்பு) செய்து ஆணை பிறப்பித்துள்ளார். அதைத்தொடர்ந்து பாகூர் சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் சிவக்கொழுந்து அனுமதியுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story