அபராத வசூலில் தன்னார்வலர்களை ஈடுபடுத்த கூடாது போலீசாருக்கு, கலெக்டர் அருண் உத்தரவு


அபராத வசூலில் தன்னார்வலர்களை ஈடுபடுத்த கூடாது போலீசாருக்கு, கலெக்டர் அருண் உத்தரவு
x
தினத்தந்தி 11 July 2020 4:00 AM IST (Updated: 11 July 2020 12:57 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் அபராத வசூலில் தன்னார்வலர்களை ஈடுபடுத்த கூடாது என போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி, 

புதுவையில் அபராத வசூலில் தன்னார்வலர்களை ஈடுபடுத்த கூடாது என போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விதி மீறல்கள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக உள்ளாட்சித் துறையானது கொரோனா விதிமீறல்கள் இருந்தால் அபராதம் விதித்து வருகிறது. அபராதங்களை வசூலித்தல், பணி நடைமுறைகளுக்கு பயன்படுத்துதல் போன்றவற்றுக்காக தன்னார்வலர்களை போலீசார் ஈடுபடுத்துவதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பிலிருந்து புகார் வருவதற்கு ஏதுவாகவும், பொதுமக்களுக்கு எதிராக அதிகாரத்தை பயன்படுத்துவதாகவும், தன்னார்வலர்கள் தடி மற்றும் லத்தி போன்றவற்றை வைத்துக்கொண்டு சுற்றுவதாகவும் தெரியவந்தது.

தண்டனைக்குரிய குற்றம்

எனவே பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 மற்றும் தொற்றுநோய் சட்டம் 1897 சட்டத்தின் கீழ் தன்னார்வலர்களை அமலாக்க நடவடிக்கைகள், அபராதம் வசூலித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது. காவல் துறையானது முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற விழிப்புணர்வு பணிகளில் மட்டும் தன்னார்வலர்களை பயன்படுத்தலாம். இந்த ஆணை கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கு பொருந்தாது. மேற்கண்ட விதிமுறைகளில் மீறல்கள் இருந்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த உத்தரவை அமல்படுத்த காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story