ஒரேநாளில் புதிதாக 72 பேருக்கு கொரோனா காரைக்காலை சேர்ந்த மூதாட்டி உயிரிழப்பு
புதுவை மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 72 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானார்கள். இதை சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,272 ஆனது.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 72 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானார்கள். இதை சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,272 ஆனது. கொரோனாவுக்கு காரைக்காலை சேர்ந்த மூதாட்டி உயிரிழந்தார்.
72 பேருக்கு கொரோனா
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் வரை 1,200 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 619 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 565 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று அதிகபட்சமாக 970 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 72 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் 60 பேர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 7 பேர் ஜிப்மரிலும், 5 பேர் காரைக்காலிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரைக்காலில் 80 வயது கடந்த மூதாட்டி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரை சேர்த்து மாநிலத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
1,272 பேர் பாதிப்பு
புதுவை மாநிலத்தில் மொத்தம் 1,272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை குணமடைந்து 637 பேர் வீடு திரும்பி உள்ளனர். கதிர்காமம் மருத்துவமனையில் 15 பேர், ஜிப்மரில் 2 பேர், காரைக்காலில் ஒருவர் என மொத்தம் 18 பேர் நேற்று வீடு திரும்பினர். மேலும் கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜிப்மரில் தொற்று அறிகுறி இன்றி சிகிச்சை பெற்று வரும் 46 பேர் கோவிட் கேர் சென்டருக்கு மாற்றப்பட்டனர்.
புதுவை மாநிலத்தில் கதிர்காமம் மருத்துவமனையில் 372 பேர், ஜிப்மரில் 116 பேர், கொரோனா கேர் சென்டரில் 73 பேர், காரைக்காலில் 35 பேர், ஏனாமில் 20 பேர், மாகியில் 2 பேர் என மொத்தம் 618 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 23,515 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 231 பேரின் பரிசோதனைகள் முடிவுகள் காத்திருப்பில் உள்ளது.
Related Tags :
Next Story