மரித்து போகாத மனிதநேயம்: கொரோனாவுக்கு பலியானவரது உடலை அடக்கம் செய்ய முன்வந்த கிராம மக்கள்
கொரோனாவுக்கு பலியான முதியவரின் உடலை அடக்கம் செய்ய முன்வந்த கிராம மக்களால், இன்னமும் மனிதநேயம் இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறது.
குளச்சல்,
கொரோனாவுக்கு பலியான முதியவரின் உடலை அடக்கம் செய்ய முன்வந்த கிராம மக்களால், இன்னமும் மனிதநேயம் இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறது.
மனிதநேயத்தை மறக்கடிக்க செய்த கொரோனா
கண்ணுக்கு தெரியாத கிருமியான கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டி படைக்கிறது. ஒரு பக்கம் கொத்து, கொத்தாக உயிரை பறிக்கிறது. மற்றொரு பக்கம் பாதிப்பை ஏற்படுத்தி மக்களை அச்சுறுத்துகிறது.
சென்னையில் சமீபத்தில் கொரோனாவால் இறந்த டாக்டர் ஒருவரது உடலை கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்வதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கொரோனாவால் இறந்தவரது உடலை எந்திரம் மூலம் குழிக்குள் தூக்கி வீசும் அவலமும் நடந்துள்ளது. இந்த மாதிரியான செயலால் மக்களிடையே மனிதநேயம் மறைந்து விட்டதோ? என்ற எண்ணம் ஏற்பட்டது.
தொற்றால் முதியவர் பலி
இந்த நிலையில் கொரோனாவுக்கு இறந்தவரது உடலை, எங்கள் பகுதியிலேயே அடக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
குளச்சல் அருகே வாணியக்குடியில் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அங்குள்ள 385 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது. அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்த 75 வயது முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். தகவல் அறிந்த குருந்தன்கோடு வட்டார சுகாதார துறையினர் வாணியக்குடிக்கு விரைந்து சென்று முதியவரது உடலை கொரோனா பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல முயன்றனர். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் முதியவரிடம் இருந்து சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவில் இறந்து போன முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வாக்குவாதம்
இதையடுத்து அவரது உடலை வேறு இடத்தில் பாதுகாப்புடன் அடக்கம் செய்ய சுகாதாரத்துறையினர் வாணியக்குடிக்கு மீண்டும் விரைந்தனர். அங்கு, கொரோனாவால் இறந்த முதியவரின் உடலை எடுத்துச் செல்ல உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், எங்கள் பகுதியிலேயே முதியவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என கூறினர். கொரோனாவால் பலியானவரது உடலை உடனே எடுத்து செல்ல பொதுமக்கள் கூறுவார்கள் என நினைத்திருந்த அதிகாரிகளுக்கு அவர்களது செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அப்படி இருந்தும் அரசு வழிகாட்டுதல்படி, இறந்தவரது உடலை எடுத்துச் செல்ல போவதாக அதிகாரிகள் கூறினர். இதனால் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. தகவல் அறிந்த கல்குளம் தாசில்தார் ஜெகதா, குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் பிரதீப்குமார், இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சுஜூத் ஆனந்த், குளச்சல் கிராம வருவாய் ஆய்வாளர் பிந்து ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடமும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
மனிதநேயம் இன்னமும் இருக்கிறது
சுமார் 4 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரச்சினை முடிவுக்கு வந்தது. பொதுமக்களின் கோரிக்கைக்கு அதிகாரிகள் செவிசாய்த்தனர். அதாவது, கொரோனாவால் இறந்தவரது உடலை அவர்களுக்கு சொந்தமான கல்லறை தோட்டத்திலேயே அடக்கம் செய்ய ஒப்புக் கொண்டனர். அதேநேரத்தில் சுகாதாரத்துறை வழிகாட்டுதல்படி அடக்கம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சுகாதார ஊழியர்கள், கொரோனாவால் இறந்த முதியவரது உடலை பாதுகாப்பாக எடுத்து சென்று வாணியக்குடி ஊர் கல்லறை தோட்டத்தில் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்படி அடக்கம் செய்தனர். அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. கொரோனாவால் மனிதநேயம் மறக்கடிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் இருந்த நிலையில், வாணியக்குடி கிராம மக்களின் செயல்பாட்டால் மனிதநேயம் இன்னமும் மரித்து போகவில்லை என்பது நிரூபணமாகி உள்ளது.
Related Tags :
Next Story