டாக்டர், நோயாளிக்கு தொற்று: நாகர்கோவிலில் 2 தனியார் ஆஸ்பத்திரிகள் மூடல்


டாக்டர், நோயாளிக்கு தொற்று: நாகர்கோவிலில் 2 தனியார் ஆஸ்பத்திரிகள் மூடல்
x
தினத்தந்தி 11 July 2020 4:00 AM IST (Updated: 11 July 2020 2:46 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் டாக்டர் மற்றும் நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து 2 தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் டாக்டர் மற்றும் நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து 2 தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன.

கொரோனா வைரஸ்

நாகர்கோவிலில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வடசேரி பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தை மூலமாகவும், அப்டா மார்க்கெட் மற்றும் கோட்டார் மார்க்கெட் மூலமாகவும் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் வியாபாரிகள், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தொற்று தற்போது பரவ தொடங்கி உள்ளது. தொற்று பாதிக்கப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியை மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

டாக்டருக்கு தொற்று

இதற்கிடையே மணி அடிச்சான் கோவில் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் டாக்டர் ஒருவர் கொரோனால் பாதிக்கப்பட்டார். அவர் கடந்த சில தினங்களாகவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஆனால் டாக்டருக்கு கொரோனா தொற்று எப்படி வந்தது என தெரியவில்லை. வடசேரி மார்க்கெட் மூலமாக அல்லது அவரிடம் சிகிச்சை பெற வந்த நோயாளி மூலமாக கொரோனா தொற்று வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியை மாநகராட்சி நிர்வாகம் மூடியது. மேலும் ஆஸ்பத்திரியில் கிருமி நாசினி தெளித்து, பிளச்சிங் பவுடரும் போடப்பட்டது. பின்னர் டாக்டருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதோடு டாக்டரிடம் சிகிச்சை பெற்றவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை செய்யும் பணி நடக்கிறது.

ஆஸ்பத்திரி மூடல்

இதே போல செம்மாங்குளம் அருகே உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்து சென்ற நோயாளி ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி டாக்டர் மற்றும் நர்சுகள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மேலும் தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதே சமயத்தில், சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியும் மூடப்பட்டது.

Next Story