கடலூர் முதுநகரில் மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகை போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு


கடலூர் முதுநகரில் மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகை போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 July 2020 4:30 AM IST (Updated: 11 July 2020 3:04 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகரில் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகரில் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுருக்குமடி வலை

கடலூரில் சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்கள் கடந்த 1-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள், அவர்களது படகுகளுக்கு ‘சீல்’ வைத்தனர். அப்போது கடலூர் துறைமுகத்தில் அதிகாரிகள் வந்த வாகனத்தை சிறைபிடித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து படகுகளில் இருந்த சீல் அகற்றப்பட்டது.

பின்னர் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சுருக்குமடி வலைக்கான தடை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் கடலூர் துறைமுகத்தில் இருந்து பல மீனவர்கள் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் படகுகளுடன் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்ததாக கூறப்படுகிறது.

போராட்டம்

இதனை அறிந்த கடலூர் மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் மற்றும் அதிகாரிகள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனைக்காக எடுத்து சென்ற லாரிகளை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் நேற்று முன்தினம் மட்டும் 20-க்கும் மேற்பட்ட லாரிகள் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மீன்வளத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதை கண்டு ஆத்திரமடைந்த மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் நேற்று முன்தினம் இரவு, கடலூர் முதுநகர் மீன் வளத்துறை அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள், மீன்வளத்துறை சார்பில் ஏலம் விடப்படும் என தகவல் வெளியானது.

தள்ளுமுள்ளு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை மீண்டும் கடலூர் முதுநகர் மீன்வளத்துறை அதிகாரி அலுவலகத்தை மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையிலான போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் மற்றும் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் போலீசாருக்கும் மீனவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.

அபராதம்

இதன் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் பேச்சுவார்த்தையின் முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட பெரிய லாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும், சிறிய லாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் கட்ட வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.

இதனை ஏற்று மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது லாரிகளை மீன் வளத்துறை அதிகாரி அலுவலகத்தில் இருந்து எடுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் முதுநகரில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Next Story