துபாயில் இருந்து வந்த மகனை கண்டு கொரோனா அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறிய பெற்றோர் கடலூரில் பரபரப்பு


துபாயில் இருந்து வந்த மகனை கண்டு கொரோனா அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறிய பெற்றோர் கடலூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 11 July 2020 4:00 AM IST (Updated: 11 July 2020 3:20 AM IST)
t-max-icont-min-icon

துபாயில் இருந்து வந்த மகனை கண்டு கொரோனா அச்சத்தில் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர், 

துபாயில் இருந்து வந்த மகனை கண்டு கொரோனா அச்சத்தில் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ்

வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வரும் போது, அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உற்சாகமாக வரவேற்று தடபுடலாக விருந்து வைத்து உபசரிப்பார்கள். ஆனால் தற்போது வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து யாராவது சொந்த ஊருக்கு வந்தால் உறவினர்களும், குடும்பத்தினரும் வீட்டுக்குள் வரவேண்டாம் என புறக்கணித்து வருகிறார்கள்.

ஒரு சிலர் அதற்கும் ஒரு படி மேல் சென்று, நீங்கள் சொந்த ஊருக்கே வர வேண்டாம் என கூறி வருகின்றனர். ஆம், இதற்கெல்லாம் காரணம் உலக நாடுகள் அனைத்தையும் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா வைரஸ் தான் முக்கிய காரணமாகும். முன்பின் தெரியாதவர்கள் வீட்டுக்கு வந்தாலே வரவேற்று உபசரிக்கும் தமிழர்களின் கலாசாரத்தையை இந்த கொரோனா வைரஸ் தலை கீழாக புரட்டிப் போட்டுள்ளது.

சிறப்பு விமானம்

அந்த வகையில் வெளிநாட்டில் இருந்து நீண்ட நாட்களுக்கு பிறகு பெற்றோரை பார்க்கும் ஆசையில் வந்த மகனை கண்டு, கொரோனா அச்சத்தில் பெற்றோர் வீட்டில் இருந்து வெளியேறிய சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் குண்டுஉப்பலவாடி பகுதியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருடைய 25 வயதான மகன் துபாய் நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். பல மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டுக்கு சென்ற அந்த வாலிபர், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விமான டிக்கெட் கிடைக்காததால் சொந்த ஊருக்கு திரும்பி வரமுடியாமல் தவித்தார். இந்த நிலையில் சிறப்பு விமானம் மூலம் அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்துள்ளார்.

வீட்டில் இருந்து வெளியேறிய பெற்றோர்

பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேற்று கடலூர் வந்தார். இதையடுத்து அந்த வாலிபர் தனது வீட்டுக்கு சென்றார். அப்போது பெற்றோர் தன்னை உற்சாகமாக வரவேற்பார்கள் என நினைத்த அந்த வாலிபருக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. ஆம், வெளிநாட்டில் இருந்து வந்த அந்த வாலிபரை பார்த்த பெற்றோர் மற்றும் தாத்தா, சகோதரி ஆகியோர் கொரோனா அச்சத்தில் உடனே வீட்டில் இருந்து வெளியேறி விட்டனர்.

பின்னர் அவர்கள் நீ மட்டும் வீட்டில் இரு, உனக்கு தேவையான சாப்பாடு மட்டும் அனுப்பி வைக்கிறோம். தற்போது நாங்கள் உறவினர் வீட்டுக்கு செல்கிறோம் என கூறி விட்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்று விட்டனர். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story