முதல் சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினம் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு


முதல் சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினம் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
x
தினத்தந்தி 11 July 2020 4:45 AM IST (Updated: 11 July 2020 4:45 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

வேலூர், 

வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

வேலூர் சிப்பாய் புரட்சி

இந்தியாவிற்கு வணிகம் செய்வதற்காக வந்த ஆங்கிலேயர்கள் பின்னர் ஒவ்வொரு பகுதிகளாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்தனர். அந்த சமயத்தில் ஆங்கிலேய படையில் இந்திய வீரர்களும் இடம்பெற்றிருந்தனர். வேலூர் கோட்டையில் திப்புசுல்தானின் குடும்பத்தினர் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை காவல் காக்க ஆங்கிலேய படையின் ஒருபிரிவு கோட்டையில் முகாமிட்டிருந்தன.

இந்த படையில் இருந்த இந்திய வீரர்கள் கடந்த 1806-ம் ஆண்டு ஜூலை 10-ந் தேதி கோட்டையில் திடீரென புரட்சி நடத்தினர். இந்த புரட்சியில் ஏராளமான இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதுவே வேலூர் சிப்பாய் புரட்சி அல்லது சிப்பாய் எழுச்சி என்றும், நாட்டின் முதல் சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட போர் என்ற வரலாற்று சிறப்பை பெற்றது.

மலர் வளையம் வைத்து மரியாதை

சிப்பாய் புரட்சியில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக கோட்டை அருகே மக்கான் சந்திப்பில் சிப்பாய் புரட்சி நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூலை 10-ந் தேதி வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு (214) சிப்பாய் புரட்சி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி வண்ண மலர்களால் நினைவு தூண் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

காலை 8 மணிக்கு வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம், நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், நகர்நல அலுவலர் சித்ரசேனா, முன்னாள் படைவீரர் நலன் உதவிஇயக்குனர் செந்தில்குமார், முன்னாள் முப்படை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி தேசிய மாணவர் படையினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story